
posted 16th October 2021
சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு விழிப்புலனற்ற நபர்களின் படைப்புகளை உள்ளடக்கிய 'கடதுராவ' நூல் வெளியீடு வெள்ளிக்கிழமை (15.10.2021) முற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
விழிப்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியத்தின் வெளியீடாக வெளியிடப்படும் இந்நூல் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அவர்களினால் கௌரவ பிரதமருக்கு வழங்கப்பட்டது.
சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு விழிப்புலனற்றவர்களின் பங்கேற்புடன் பிற தினங்களில் நடத்தப்படும் வெள்ளை பிரம்பு தின பேரணி மற்றும் கொண்டாட்டங்கள் கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக இம்முறை ஏற்பாடு செய்யப்படவில்லை.
அதற்கு பதிலாக விழிப்புலனற்ற படைப்பாளர்களுக்காக நாடளாவிய ரீதியில் சிறுகதை மற்றும் கவிதை போட்டிகளை நடத்தி அதில் தெரிவுசெய்யப்பட்ட படைப்புகளை உள்ளடக்கியதாக 'கடதுராவ' என்ற பெயரில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை குறிக்கும் வகையில் கௌரவ பிரதமர் இதன்போது விழிப்புலனற்ற பட்டதாரிகள் சபையின் தலைவர் சுகத் வசந்த த சில்வா அவர்களுக்கு வெள்ளை பிரம்பொன்றை வழங்கிவைத்தார்.
குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் கௌரவ சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, இராஜாங்க அமைச்சின் செயலாளர் சுனேத்ரா குணவர்தன, சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் சந்தன ரணவீர ஆராச்சி உள்ளிட்ட விழிப்புலனற்றோர் சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ