
posted 13th October 2021
மன்னார் மாவட்டத்தில் பெரும் போக பயிற்செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் பாரம்பரிய நெல் செய்கை மற்றும் இயற்கை முறையிலான நெற் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோவின்) அணுசரணையில் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 விவசாயிகளுக்கு ஒரு தொகுதி பாரம்பரிய விதை நெல் மற்றும் பயிர்ச்செய்கைக்கான உதவித்தொகை வழங்கும் ஆரம்பகட்ட நிகழ்வு செவ்வாய்கிழமை (12.10.2021) நானாட்டான் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது
மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குபட்ட தெரிவு செய்யப்பட்ட 13 விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு தேவையான 60 (kg) கிலோ சீநெட்டி (சீமாட்டி) பாரம்பரிய நெல் விதைகளும் அவர்களுடைய விவசாய செயற்பாட்டுக்கான செலவாக ஆறாயிரம் ரூபா நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாரம்பரிய நெல் இனம் அழிந்து விடாமல் இருக்க பயனாளிகளாக தெரிவுசய்யப்பட்ட விவசாயிகள் நெற்செய்கை மேற்கொண்டு கிடைக்கும் விளைச்சலில் பிறிதொரு பயனாளருக்கு அறுபது கிலோ விதை நெல் வழங்கப்பட வேண்டும் என்று மன்னார் மெசிடோ நிறுவனத்தால் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலேயே இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
குறித்த நிகழ்வு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நானாட்டான் பிரதேச செயளாலர் மா.சிறீஸ்கந்தகுமார் மற்றும் மெசிடோ நிறுவன மாவட்ட குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது
இந்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்களும் விவசாயிகளும் கலந்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ