
posted 27th October 2021

ஏ.எல்.முகம்மட் முக்தார்
2016 ஆம் ஆண்டு முதல் 2019 வரை அரசாங்க சேவையில் இருந்து ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மறுக்கப்பட்ட ஓய்வூதிய அதிகரிப்பை வழங்க உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஓய்வூதியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுளளதாக அதன் உப தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.முகம்மட் முக்தார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கு கொவிட் அசாதாரண சூழ்நிலை காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையால் நீதிமன்றில் சமர்ப்பணத்துக்காக எடுக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கை இந்த அமைப்பு சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி சுனில் வட்டகல மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கின் பிரதிவாதிகளாக அமைச்சரவை அமைச்சர்கள் சிலர், பொதுநிருவாக அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் 2016ஆம் ஆண்டு அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான சம்பளம், 2016 முதல் 2020 வரை 05 கட்டங்களாக வழங்கப்பட்டது. இதில் 2016 முதல் 2019 வரை ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட வேண்டிய அடிப்படை சம்பளத்திற்கு ஏற்றவாறு ஓய்வூதியத்தை கணிப்பிட்டு வழங்குமாறு பொது நிருவாக அமைச்சு 35/2019 ஆம் இலக்க சுற்று நிருபம் வெளியிடப்பட்டிருந்தது. எனினும் 2019 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வந்த புதிய அரசு அக்கொடுப்பனவை நிறுத்தியிருந்தது. இதன் காரணமாக சுமார் 1,20,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் இதுவரை நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்த சுமார் 1900 ஓய்வூதியர்கள் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த அநீதிக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடாத்தப்பட்டன. ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், ஜனாதிபதி ஆகியோரைச் சந்திப்பதற்கு அவகாசம் தருமாறு கோரியிருந்தும் அதற்கான அவகாசம் வழங்கப்படவும் இல்லை. இந்நிலையில் நீதிமன்றத்தின் மூலம் சாதகமான தீர்வை எதிர்பார்த்துள்ளோம்- என்றார்.

ஏ.எல்.எம்.சலீம்