
posted 20th October 2021
பந்துல வர்ணபுர அவர்களின் பெயர் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட்டிருக்கும் - இலங்கை பிரதமர்.
அவர், பயிற்றுவிப்பாளராகவும், நிர்வாகியுமாக கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்கு வழங்கிய பங்களிப்பினாலும், கிரிக்கெட்டிற்காக ஆற்றிய சேவையினாலும் பந்துல வர்ணபுர அவர்களின் பெயர் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட்டிருக்கும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச பந்துல வர்ணபுர அவர்களின் மறைவையொட்டி விடுத்திருந்த அனுதாப செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டிருக்கும் தனது அனுதாப செய்தியில்;
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது அணித் தலைவரான பந்துல வர்ணபுர அவர்களின் மறைவு செய்தி அறிந்து நான் மிகவும் மனவருத்தமடைந்தேன்.
தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகவும், பின்னர் இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக பதவியிலும் சேவையாற்றிய வர்ணபுர அவர்கள் இந்நாட்டின் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் இலங்கையராவார்.
கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான பந்துல வர்ணபுர அவர்கள், நாலந்தா கல்லூரி கிரிக்கெட் அணியின் தலைவருமாவார். அன்று முதல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வந்த அவர், 1975ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்தார்.
1975-1982 காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணியை பிரிதிநிதித்துவப்படுத்திய பந்துல வர்ணபுர அவர்கள், இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் கிடைத்த சிறந்த வீரராவார். இலங்கை டெஸ்ட் வாய்ப்பை பெறுவதற்காக கடுமையாக போராடிய போது தனது அணிக்கு அவர் பெரும் பலமாக விளங்கியதுடன் இலங்கை அணி பங்கேற்ற முதலாவது டெஸ்ட் போட்டிக்கு பந்துல வர்ணபுர அவர்களே தலைமை தாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1979ஆம் ஆண்டு பந்துல வர்ணபுரவின் தலைமையிலேயே இலங்கை அணி முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி வெற்றியை பதிவுசெய்தது.
இலங்கை அணியின் சார்பில் 4 டெஸ்ட் போட்டிகளிலும் 12 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் பந்துல வர்ணபுர விளையாடியுள்ளார்.
பயிற்றுவிப்பாளராகவும், நிர்வாகியுமாக கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்கு வழங்கிய பங்களிப்பினாலும் கிரிக்கெட்டிற்காக ஆற்றிய சேவையினாலும் பந்துல வர்ணபுர அவர்களின் பெயர் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட்டிருக்கும்! பந்துல வர்ணபுர அவர்களின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பாகும் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ