
posted 12th October 2021
மன்னார் மாவட்டத்தில் சேதனப் பசளையை பயன்படுத்தி நெல் உற்பத்தியை மேற்கொள்வது சாத்தியமான பெறுபேறுகளை தரமாட்டாது எனவும் இதனால் மன்னார் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்புகளுக்கு உள்ளாகும் என மன்னார் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளதாக நடப்பு வருட காலபோக நெற்செய்கை சம்பந்தமான முன்னோடி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் பிரதானமான குளமாக விளங்கும் கட்டுக்கரைக்குளத்தின் கீழ் 2021- 2022 ஆண்டுக்கான தற்பொழுது மேற்கொள்ளப்பட இருக்கும் காலபோக நெற்செய்கை தொடர்பாக முன்னோடி கூட்டம் கடந்த வாரம் கட்டுக்கரைகுளத் திட்ட வதிவிட திட்ட முகாமையாளர் கே.டி. ஜேக்கப் தலைமையில் முருங்கனில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் விவசாய அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள், விவசாய திணைக்களம் மற்றும் நீர்பாசன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் தெரிவிக்கப்பட்டதாவது. சேதனப் பசளையை பயன்படுத்தி நெல் உற்பத்தியை மேற்கொள்வது சாதகமான பெறுபேறுகளை தரமாட்டாது எனவும், மன்னார் விவசாயிகளின் வாழ்வாதாரம் இதனால் பாதிப்புகளுக்கு உள்ளாகுமெனவும், எனவே இவ்விடயம்பற்றி மன்னார் அரசாங்க அதிபரூடாக கோரிக்கையை அரசாங்கத்துக்கு முன்வைக்கும்படி விவசாயிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இக் கூட்டத்தில் மாகாண விவசாய விரிவாக்க உதவிப்பணிப்பாளரின் பிரதிநிதியாக கலந்துகொண்ட நானாட்டான் பகுதி விவசாய போதனாசிரியரால் சேதனப் பசளை உற்பத்தி முறைபற்றி விளக்கவுரை வழங்கப்பட்டது.
சேதனப் பசளையுடன் கலப்பதற்கு நைதரசன், மூலக்கூறு அடங்கிய பொதி திரவமாகவோ திண்மமாகவோ வழங்கப்படும் எனவும் பொஸ்பேற்றை தமது கமநலகேந்திர நிலையங்களில் தற்போது பெற்றுக்கொள்ள முடியுமெனவும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரால் இக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ