நெற்செய்கை அம்பாறையில் ஆரம்பம்

இலங்கையின் நெல் உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் அம்பாறை மாவட்டத்தில் பெரும் போக நெற் செய்கைக்கான முன் ஆயத்த வேலைகளை விவசாயிகள் ஆரம்பத்துள்ளனர்.

தற்போது பருவ மழை ஆரம்பித்துள்ளமையாலும், விவசாய ஆரம்பக் கூட்டத் தீர்மானங்களின்படி விதைப்பு முடிவடைய வேண்டிய கால எல்லை நெருங்குவதாலும் விவசாயிகள் விதைப்பிற்கு முன்பான உழவு மற்றும் ஆயத்த வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

திடுதிடுப்பென அரசாங்கம் இரசாயன உரஇறக்குமதியை நிறுத்தி சேதன உரப்பாவனையயே கட்டாயப்படுத்தியுள்ளதால், பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள விவசாயிகள் அச்சம் பீதி கொண்ட மன நிலையுடன் ஆர்வமற்றவர்களாக இந்த பெரும்போக நெற்செய்கைக்கான முன்னெடுப்புகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இரசாயன உரப்பாவனையுடன் மிகநீண்ட காலம் நெற்செய்கை மேற்கொண்டு பழக்கப்பட்டு வந்த தமது உழைப்பின்மீது சேதன உரப்பாவனையை அரசு திணித்துள்ளதால் செய்கையில் வெற்றிகாண முடியாதெனவும், சேதன உரப்பாவனையால் இம்முறை விழைச்சலில் பெரும் வீழ்சியையும், நஸ்டத்தையுமே எதிர் நோக்க வேண்டிய நிலையே ஏற்படுமெனவும் பெரும்பாலான விவசாயிகள் நம்புகின்றனர்.

இதனால் நாடளாவிய ரீதியில் இரசாயன உரப்பசளையே தமக்கு தாமதமின்றி வழங்குமாறு கோரி பாரிய ஆர்பாட்ங்களையும் விவசாயிகள் முன்னெடுத்து வருகின்ற நிலையிலும் அரசு அசைந்து கொடுக்க இதுவரை முன்வரவில்லை.

இந்த நிலையில் அம்பாறை மாவட்த்தில் இம்முறை பெரும்போக நெற்செய்கைக்கென தமது காணிகளை குத்தகைக்கு வழங்கும் காணிச் சொந்தக்காரர்களும் (போடிமார்) வருமான இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த காலங்களின் போது ஒரு ஏக்கர் நெற்காணியை 65 ஆயிரம் ரூபா வரை குத்தகைக்கு விட்ட போதிலும் இந்த பெரும்போகத்தி;ல் இரசாயன உரத்தடை காரணமாக தற்போது சரி அரை வாசியாகக் குறைந்து ஒரு ஏக்கர் நெற்காணியை 30 ஆயிரம் ரூபா குத்தகைக்கே வழங்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

இதே வேளை சுற்றாடலையும், மக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பதுடன், அதிக இலாபத்தை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே அரசின் முக்கிய எதிர்பார்ப்பு என இந்த விவகாரம் தொடர்பில் ஆணித்தரமாக கூறியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஒரு போகம் இரு போகத்திற்கு மாத்திரமின்றி பல சந்ததியினர் பயன்பெறச்செய்யப் பசுமை விவசாயத்தை முன்னெடுப்பதே எமது இலக்கு எனவும் தெறிவித்துள்ளார்.

“விடாக்கண்டன், கொடாக்கண்டன்” பாணியில் உர விவகாரம் உரத்துச்செல்கின்றது. எதிர்காலம் பதில் சொல்லும் என்கிறார்கள் விவசாயிகள்!

நெற்செய்கை அம்பாறையில் ஆரம்பம்

ஏ.எல்.எம்.சலீம்