நாளை பாடசாலைகள் ஆரம்பம்
நாளை பாடசாலைகள் ஆரம்பம்

பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன்

கொவிட் - 19 வைரஸ் பரவல் தாக்கத்தினால் மூடப்பட்ட பாடசாலைகளை நாளை 21 ஆம் திகதி வியாழன் முதல் திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி முதற்கட்டமாக நாடளாவிய ரீதியில் 200 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளைத் திறப்பதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடு பிரச்சினையைத் தீர்க்குமாறு கோரி தொழிற் சங்கப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட் கிழமையே கடமைக்குத் திரும்புவோமென நிபந்தனை விதித்துள்ள நிலையில், நாளை பட்டதாரி பயிலுனர்களைக் கொண்டு பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதன்படி 18 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களைக் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட 200இற்குக் குறைந்த மாணவர்களைக் கொண்ட 21 பாடசாலைகளை நாளை திறப்பதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளதாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் அடுத்த கட்டமாக ஆரம்பப் பிரிவு, இடைநிலைப் பிரிவு, உயர்தரப் பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், குறிப்பாக பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன் சுகாதார அமைச்சு வெளியிட்ட சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதை அதிபர்கள் உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை பாடசாலைகள் ஆரம்பம்

ஏ.எல்.எம்.சலீம்