நாடெங்கும் இயல்பு நிலை. நாடெங்கும் இயல்பு நிலை. கிழக்கில் மகிழ்ச்சிப் பிரவாகத்தில்  மக்கள்
நாடெங்கும் இயல்பு நிலை. நாடெங்கும் இயல்பு நிலை. கிழக்கில் மகிழ்ச்சிப் பிரவாகத்தில்  மக்கள்

நாடளாவிய ரீதியில் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டதையடுத்து பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

நாட்டில் வேகமாகப் பரவிய டெல்டா வைரஸ் (கொவிட்) காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமுலுக்கு வந்ததுடன், பின்னர் வாராவாரம் ஊரடங்கு காலத்தை நீடித்து இறுதியாக இன்று வரையில் நடைமுறையிலிருந்துவந்தது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கடுமையான சுகாதாரக்கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவும், குறிப்பாக புதிய சுகாதார வழிகாட்டலின்படி பொதுப் போக்குவரத்து பயன்பாட்டின் போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன், இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து கிழக்கில் பொது மக்கள் பெரும் மகிழ்ச்சிப் பிரவாகத்துடன் தமது அன்றாட கருமங்களை முன்னெடுத்தனர்.

இது வரை பாதிக்கப்பட்டிருந்த தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதான நிலமையில் பொது மக்கள் காணப்பட்டனர்.

கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, பொத்துவில், அக்கரைப்பற்று முதலான முக்கிய நகரங்களிலிருந்து இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்வண்டிகள் சேவையிலீடுபட்டிருந்த போதிலும், குறைந்த அளவு பஸ் வண்டிகள் சேவையிலீடுபட்டதையே அவதானிக்க முடிந்தது.

இதே வேளை அரச அலுவலகங்கள், திணைக்கள அலுவலகங்களின் சேவைகளைப் பெற மக்கள் பெருமளவில் வருகை தந்தனர்.

குறிப்பாக பிரதேச செயலகங்களில் முக்கியமாக வருடாந்த வாகன அனுமதிப்பத்திரம் புதுப்பிப்பதற்கென ( Vehicle Revenue License) சில பிரதேச செயலகங்களில் நீண்ட வரிசையில் வாகன உரிமையாளர்கள் காணப்பட்ட அதேவேளை குறித்த அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு முன்னோடியான வாகன புகைப்பரிசோதனை நிலையங்களில் ( Emission Test) பெருந்தொகையானோர் தத்தமது வாகனங்களுடனும் காணப்பட்டமையும் குறிப்பிட்டத்தக்கது.

மேலும் கொவிட் - 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலமைக்கு மத்தியிலேயே இன்று நாடு திறக்கப்பட்டுள்ளது எனவும் தடுப்பூசி ஏற்றிக்கொண்டாலும் தாம் நூறு வீதம் பாதுகாப்பாகவுள்ளோமென கருத முடியாததால் சுகாதார வழிமுறைகளை சகல தரப்பினரும் பின்பற்றுவது அவசியமானதாகுமெனவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் இயல்பு நிலை. நாடெங்கும் இயல்பு நிலை. கிழக்கில் மகிழ்ச்சிப் பிரவாகத்தில்  மக்கள்

ஏ.எல்.எம்.சலீம்