தொடரும் தடுப்பூசி வழங்கல்
தொடரும் தடுப்பூசி வழங்கல்

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான பைஸர் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் வெற்றிகரமாக இடம் பெற்றுவருகின்றது.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜீ.சுகுணனின் ஆலோசனைக்கு அமைவாக, பிராந்தியத்திலுள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலுமுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 18 – 19 வயதான பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதுடன்,
கடந்த வியாழக்கிழமை முதல் தினம் 3771 மாணவர்களுக்கு தமது பிராந்தியத்தில் பைஸர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய பணிப்பாளர் டாக்டர். சுகுணன் தெரிவித்தார்.

குறித்த இருதினங்களிலும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் மாணவ, மாணவியர்கள் மிகுந்த ஆர்வம் காட்டியதாகவும், இத்தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஜீ.சீ.ஈ சாதாரண தர மாணவர்களுக்கான பைஸர் தடுப்பூசி வழங்கல் ஆரம்பமாகி தொடர விருப்பதாகவும் டாக்டர். சுகுணன் தெரிவித்துள்ளார்.

இதே வேளை நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள 18 – 19 வயது பாடசாலை மாணவர்களுக்கான பைஸர் தடுப்பூசி வழங்கல் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பரூஸா நக்பரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

டாக்டர். பரூஸா நக்பர் குறித்த மாணவ, மாணவியர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு நேரடியாகச் சென்று தமது கண்காணிப்புடன் தடுப்பூசி வழங்கலைத் தொடர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தவிரவும் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட் கிழமை முதல் நாடளாவிய ரீதியில் சகல ஆரம்பப் பாடசாலைகளையும் திறப்பதற்கு கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் தடுப்பூசி வழங்கல்

ஏ.எல்.எம்.சலீம்