
posted 31st October 2021
கொழும்பில் அமைந்துள்ள கொரிய தூதுவராலயத்திற்கு விஜயம் செய்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மறைந்த தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி ரோஹ் தே-வூ அவர்களுக்கு 29.10.2021 அன்று பிற்பகல் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி ரோஹ் தே-வூ அவர்களின் மறைவு குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள், தென்கொரிய மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் இதன்போது அனுதாப குறிப்பொன்றை முன்வைத்தார்.
கொழும்பில் உள்ள கொரிய தூதரகத்திற்கு பிரதமர் கொரிய தூதுவரான வூ-ஜின் ஜொங்க் அவர்களினால் வரவேற்கப்பட்டதன் பின்னர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரோஹ் தே-வூ அவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.
தென் கொரிய குடியரசின் செழிப்புக்காக மறைந்த ஜனாதிபதி ரோஹ் தே-வூ அவர்கள் ஆற்றிய அளப்பரிய சேவை கொரிய மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும் என கௌரவ பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தலைநகர் சியோலில் உள்ள மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த ரோஹ் தே-வூ அவர்கள் தனது 88ஆவது வயதில் காலமானார்.

வாஸ் கூஞ்ஞ