
posted 22nd October 2021
தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தின்போது நல்லூரில் அஞ்சலியில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பொலிஸாரினால் அகௌரவப்படுத்தி கைது செய்ததை வன்மையாக கண்டிக்கின்றோம் என கரவெட்டி, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (21.10.2021) உப தவிசாளர் கே .பொன்னையா தலைமையில் நடைபெற்றது.
இதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் த.சிவராசா, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது செய்யப்பட்டமை ஒரு நாகரிகமற்ற செயல். அதனை வன்மையாக கண்டிக்கின்றோம் என கோரி தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். இத்தீர்மானத்தை அதே கட்சியைச் சேர்ந்த பரந்தாமன் மோகன் வழிமொழிந்தார். இச்சம்பவம் குறித்து அக்கட்சியின் மற்றுமோர் உறுப்பினரான கந்தப்பு இளங்கோ விரிவாக எடுத்துரைத்து கண்டனம் தெரிவித்தார். இத்தீர்மானத்தை கட்சி ரீதியாக பார்க்கவில்லை இன ரீதியாக நாங்கள் பார்க்கின்றோம் என தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர் தெரிவித்தார்.
இத்தீர்மானத்தை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம் என சபையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களான பொ.வியாகேசு, க.பரஞ்சோதி, ந.நிலாங்கதன் ஆகியோர் ஒரு மனதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து இத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

எஸ் தில்லைநாதன்