
posted 25th October 2021

இரா.துரைரெத்தினம்
மட்டக்களப்பு – பொலன்னறுவை எல்லைக்கிராமமான புணாணை காரமுனை பகுதியில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திட்டமொன்று செய்யப்படுவதற்கான முஸ்தீபுகள் எடுக்கப்படுவது குறித்து, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்ம நாபா மன்றத்தலைவருமான இரா.துரைரெத்தினம் கவலையும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரை ரெத்தினம் மேலும் தெரிவிக்கையில் பின்வருமாறு கூறினார்.
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொலனறுவை எல்லைக்கிராமங்களான புணானை,காரமுனை பகுதிகளில் 198 சிங்களக் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஆறு ஏக்கர் வீதம் மொத்தமாக 1200 ஏக்கர் தமிழ் பிரதேச காணிகளை சிங்கள மக்களுக்கு வழங்கி திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தை மேற்கொள்வதற்கு காணி ஆணையாளர் அலுவலகம் ஊடாக பௌத்த துறவிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தைப் பொறுத்தவரையில் இவர்களிடம் உள்ள வருடாந்த அனுமதிப்பத்திரம் 1982ம்ஆண்டு வழங்கப்பட்டுள்ளதாவும், இது வழங்கிய அதிகாரி குறிப்பிட்ட ஆண்டு காலங்களில் அத்திணைக்களத்தில் கடமை புரியவில்லையெனவும், கடந்த வாரம் இப் பிரதேசத்திலேயே காணி ஆணையாளர் நாயகத்தின் வழிகாட்டலின் பேரில் கிழக்கு மாகாணசபை காணி அலுவலகமும் இணைந்து இவர்களுக்கு காணி நடமாடும் சேவை நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
இது தொடர்பாக பலமுறை தொடங்கி ஆரம்பித்து கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் மீண்டும் முயற்சி எடுப்பதென்பது இப்பிரதேசத்தில் பாரிய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை குடியேற்றும் நோக்கமாகக் கொண்டதே என கருதப்படுகின்றன.
இப்பிரதேசத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய சிங்களக்குடும்பங்களும், நூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம் குடும்பங்களும் வாழ்ந்து வரும் போது 1983,1985,1987,1990ம்ஆண்டு காலப்பகுதிகளில் இனக் கலவரங்கள் ஏற்பட்டு இடம் பெயர்ந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
தமிழ்பேசும் மக்கள் மீளக்குடியமரச் செல்லும் போது இக்காணி வனவளத்திணைக்களத்திற்கு உரியதெனவும், மகாவலிக்குரியதெனவும், வாக்காளர் இடாப்பு தேவையெனவும், அகதியாக வாழ்ந்ததற்கு ஆதாரம் தேவையெனவும்,ஒப்பங்கள் இரத்துச் செய்யப் பட்டுள்ளதாகவும் தமிழ் மக்களுக்கு சொல்லும் அரசு சிங்கள மக்களிடம் ஏன் கேட்க முடியாது?
ஆறு,ஏழு சிங்களக் குடும்பங்கள் இருந்ததற்காக 200குடும்பங்களுக்கு போலியான ஒப்பங்களை வழங்கி ஆறுஏக்கர் வீதம் காணிகளை வழங்குவதற்கு பௌத்த மத குருமார் முற்படுவதென்பதும், இப்பிரதேசத்தில் ஏற்கனவே திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் புணானை பகுதியில் பௌத்த மத குருக்களாலும், ஒருசில மறைமுகமான இனவாதிகளாலும் மேற் கொள்ளப் பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கோறளைப்பற்றுவடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொழும்பு பிரதான வீதியிலுள்ள புணானையிலிருந்து பொலனறுவை மாவட்ட எல்லை வரையும், பிரதானவீதி இரு ஓரங்களிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை மேற்கொண்டு தனிப் பிரதேசமாகக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றனவா?
அரசஉத்தியோகத்தர்களைப் பொறுத்தவரையில் அரசியல் உயர் அழுத்தம் காரணமாக மௌனித்துள்ளனரா? என கருத வேண்டியுள்ளது என்றார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் மாண்புமிகு ஜனாதிபதிக்கு இரா.துரைரெத்தினம் கோரிக்கை முன் வைத்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்