தமிழர் பிரச்னை தீர்வு பற்றிபேச இந்தியாவாலேயே முடியும்
தமிழர் பிரச்னை தீர்வு பற்றிபேச இந்தியாவாலேயே முடியும்

தமிழர் பிரச்னை தீர்வு குறித்து இந்தியா எமக்காகப் பேசவேண்டும். எமது நலன் சார்ந்து பேசுவதற்கு இந்தியாவாலேயே முடியும் என்று இந்திய வெளிவிவகார செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம் வலியுறுத்தியுள்ளார் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்த இந்திய வெளிவிவகார செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கும் வருகை தந்தார். அவரை பலாலி விமான நிலையத்தில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் வரவேற்றார். பின்னர், யாழ்ப்பாணத்தின் பிரபல ஹோட்டலில் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற சந்திப்பு நிகழ்வில் பங்கேற்ற போதே சீ. வீ. கே. மேற்படி விடயத்தை வலியுறுத்தினார்.

மேலும், புனர்வாழ்வின் பின்னர் விடுதலையான சுமார் 12 ஆயிரம் போராளிகள் நிர்க்கதி நிலையிலுள்ளனர். அவர்கள் வாழ்வாதார மின்றி பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர். பலர் வாழ்வதற்கு பொருத்தமான வீடுகளையே கொண்டிருக்கவில்லை. எனவே, இந்தியா வழங்கும் வீட்டுத் திட்டங்களில் முன்னாள் போராளி களையும் உள்வாங்க வேண்டும்.

முன்னாள் போராளிகள் பலர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைகளின்றி நீண்ட காலம் தடுத்து வைக்கப்படுகின்றனர். இதன்போது அவர்கள் சித்திரவதைகள், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகின்றனர். வழக்கு விசாரணைகளின் பின்னர் விடுதலையாகும் அவர்கள் பல் வேறு துன்பங்களை எதிர்கொள் கின்றனர். இவ்வாறான செயல்பாடுகளை நிறுத்துவதற்கு இந்தியா இயன்றளவான நடவடிக்கைகளை முன்னெடுக்கக வேண்டும்.

வடக்கு மக்களுக்கு பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் என்பவற்றால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இவற்றின் பணிகளை இந்தியா துரிதப்படுத்த வேண்டும்.

நாம் புதிய அரசமைப்பு தொடர்பில் சிந்திப்பதுடன், அரசாங்கத்துடன் பேசியும் வருகின்றோம். ஆனால், புதிய அரசமைப்பு உருவாக்கம் பெற்று - நடைமுறைக்கு வருவதற்கு முன்பு தற்போதிருக்கும் அரசமைப்பின் விடயதானங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப் படவேண்டும். இதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் - என்றார்.

சந்திப்பின் இறுதியில் கருத்துத் தெரிவித்த இந்திய வெளிவிவகார செயலர், சந்திப்பில் தெரிவித்த விட யங்கள் குறித்து நிச்சயம் கவனம் செலுத்துவேன் என்று உறுதியளித்தார்.

தமிழர் பிரச்னை தீர்வு பற்றிபேச இந்தியாவாலேயே முடியும்

எஸ் தில்லைநாதன்