
posted 20th October 2021
முறையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும்படியே நாங்கள் கடலில் படகுகள் பேரணி போராட்டத்தை மேற்கொண்டிருந்தோம். இந்த தடைச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நேற்றிரவு ஓர் இந்திய மீனவரின் உயிர் பிரிந்திருக்காது. எனவே, இந்த சட்டம் ஒழுங்கான முறையில் உள்ளது - நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை தெளிவாக வெளிப்படுத்தினால் இப்படியான அநாவசியமான இழப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம் இவ்வாறு தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
கடந்த செவ்வாய்க்கிழமை (19.10.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;
இலங்கையில் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது என யாருமே நினைக்கக்கூடாது. இந்தத் தொழில்முறை தடை செய்யப்பட வேண்டும் என 2016ஆம் ஆண்டு இந்திய அரசும், எமது அரசும் ஒன்றாகப் பேசி இரண்டு அரசாங்கங்களும் இணங்கியபடி இந்த தொழில் கடல் வளத்துக்கு பாதிப்பானது, சுற்றுச்சூழலை பாதிக்கிறது என அடுத்தடுத்த தலைமுறைக்கு மீன் வளத்தை இல்லாமல் செய்கிற விடயமாகும். இதனை எவர் செய்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த சட்டத்தை மீறி பலர் உள்நாட்டிலும் தொழில் செய்கிறார்கள். அவர்களுக்கு எதிராகவும் இந்த சட்டம் பயன்படுத்தப்படவேண்டும். விசேடமாக குருநகர் பகுதியில் இருக்கிறவர்கள் 6 வருடங்களுக்கு முதல் என்னுடன் பேசும்போது ஆறு மாதத்தில் நிறுத்தி விடுவோம் எனக் கூறினார்கள். ஆனால், தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார்கள். கடல் வளங்கள் அழிக்கப்படுவது தெரிந்து கொண்டும் தொடர்ந்தும் செயல்படுகிறார்கள்.
உள்ளூர் மீனவர்களாக இருந்தாலும், வெளி மாவட்டங்களில் இருந்து எமது பிரதேசத்தில் தொழில்புரிபவர்களாக இருந்தாலும் அந்நிய நாட்டிலிருந்து வந்து தொழில் பவர்களாக இருந்தாலும் இந்தத் தொழில்முறையானது சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அது தொடர்ச்சியாக தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் உண்மையான விடயம் - என்றார்.

எஸ் தில்லைநாதன்