
posted 24th October 2021

நாடளாவிய ரீதியில் கொவிட் - 19 வைரஸ் பரவல் குறைந்து வருவதையடுத்து முஸ்லிம் பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகையை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்களின் முக்கிய தினமான வெள்ளிக்கிழமைகளில் குத்பா பிரசங்கத்துடன் ஜும்ஆ தொழுகை இடம்பெறுவது வழக்கமாகும்.
எனினும் நாட்டில் கொவிட் - 19 வைரஸ் பரவல் தீவிரமடைந்திருந்ததால் பள்ளி வாசல்களில் மக்கள் ஒன்று கூடுவதால் ஏற்படும் வைரஸ் பரவல் அபாய நிலமையைக்கருதி ஜும்ஆ தொழுகை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்சமயம் கொவிட் - 19 வைரஸ் பரவல் வெகுவாகத் தணிந்து வருவதால், மீண்டும் ஜும்ஆ தொழுகையை பள்ளிவாசல்களில் தொடர்வதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் கொவிட் 19 சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதுடன், மட்டுப்படுத்தப்பட்டவகையில் ஐம்பது பேருடன் மட்டும் ஜும்ஆ தொழுகை நடத்தப்பட வேண்டுமெனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை (22.10.2021) முதல் இவ்வாறு ஜும்ஆ தொழுகைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பள்ளிவாசல் சூழலில் பொது மக்கள் ஒன்று கூடுவதை முற்றாகத் தவிர்த்து நடக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்