
posted 5th October 2021

அண்மையில் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகி காலம் சென்ற ஓய்வுநிலை அரச ஊழியரும், மூத்த செய்தியாளரும், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினருமான அன்ரனி மார்க் அவர்களுக்கு மன்னார் சர்வோதயத்தின் ஏற்பாட்டில் அவரகளது அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதில் நான்கு மதத் தலைவர்களும், மன்னார் அரசாங்க அதிபரும். அரசு சார்பற்ற திணைக்களங்களின் முக்கியஸ்தர்களும், மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டு மறைந்த அன்ரனி மார்க் அவர்களின் உருவப் படத்திற்கு மாலையிட்டு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
அரச அதிபர் தனது இரங்கல் உரையில்;
தனக்கென குடியிருப்பதற்கு ஒரு காணித் துண்டும் இல்லாது மக்கள் நலன் நோக்கி வாழ்ந்து சென்றவர்தான் அமரர் அன்ரனி மார்க் என தெரிவித்தார்.
காலம் சென்ற அன்ரனி மார்க் மன்னார் மாவட்டத்தில் ஒரு காணி அதிகாரியாக இருந்தபோதும் அவர் இறக்கும் வரைக்கும் தனக்கென ஒரு காணித் துண்டும் இல்லாது அவர் தனது குடும்பத்தாருடன் வாடகை வீடுகளிலேயே வசித்து வந்தார்.
அவர் தனது வாழ்வை எமது மாவட்ட மக்களுக்காகவே முழுமையாக அர்ப்பணித்துள்ளார் என்பது இது ஒரு எடுத்துக்காட்டு.
எங்கெல்லாம் மனித உரிமைகளுக்காக போராடுகின்றார்களோ அங்கெல்லாம் இவர் அதில் பங்குபற்றி உரிமைக்காக போராடி வந்தவர்.
தன்னைச் சார்ந்த இனத்தை, மொழியை தனது உயிர்போல் நேசித்தவர்தான் இவர்.
பொது பணிகளில் ஈடுபடும் எம் ஒவ்வொருவருக்கும் அவர் ஒரு நல்ல வழியைக்காட்டிச் சென்றுள்ளார் என கூறலாம்.
இவ்வாறானவர் நாட்டில் நிலவிய கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார். மக்கள் நலனுக்காகவே வாழ்ந்து தன்னை அர்பணித்து இறந்துபோன அன்ரனி மார்க் அவர்களின் ஆன்மாவுக்கு இறைவன் நித்திய இளைப்பாற்றியை கொடுக்க வேண்டும் என தனது இரங்கல் உரையில் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ