
posted 1st October 2021

எமக்கு இறப்புச் சான்றிதழோ, இழப்பீடோ வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளே வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா. அலுவலக முன்றலில் யாழ்ப்பாணம் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் நிறைவில் யாழ்ப்பாணம் மாவட்ட உப தலைவி நிர்மலநாதன் மேரி ரஞ்சினி ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:-
எமது பிள்ளைகள்-உறவுகளை நீண்ட காலமாக பறிகொடுத்துவிட்டு தவிக்கின்றோம். தற்போதைய அரசு எமக்கு இறப்புச் சான்றிதழையும் இழப்பீட்டையும் கொடுத்து இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட நினைக்கின்றது.
ஆனால் எமக்கு எமது பிள்ளைகள் உயிரோடு வேண்டும். எமக்கு இறப்புச் சான்றிதழ் அல்லது இழப்பீடு வேண்டாம். அது தவறும் பட்சத்தில் எங்களையும் கொன்று விடுங்கள். நாங்கள் உறவுகளைத் தவிர எந்த உதவிகளையும் என்றுமே ஏற்க மாட்டோம் - என்றார்.

எஸ் தில்லைநாதன்