
posted 17th October 2021
வவுனியாவில் மேலும் 32 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 24 வயது யுவதி உட்பட மூவர் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் முடிவுகள் சில நேற்று சனிக்கிழமை காலை வெளியாகின.
அதில் வவுனியா மாவட்டத்தின் நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளையும் உள்ளடக்கியதாக 32 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொற்றாளர்களைக் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், கொரோனாத் தொற்று காரணமாக எந்தவித தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாத நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரும், சாஸ்திரிகூழாங்குளம் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவரும், உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஆண் ஒருவரும் என மூவர் மரணமடைந்துள்ளனர்.
மரணித்தவர்களின் சடலங்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன்