
posted 12th October 2021

டாக்டர். ஜீ.சுகுணன்
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கொவிட் - 19 வைரஸ் பரவல் கணிசமான அளவு தணிந்துள்ள தற்போதய நிலையில், மற்றொரு அனர்த்தத்தைத் தோற்று விக்கக்கூடிய டெங்கு நோய் பரவக்கூடிய ஏது நிலை குறித்து பொது மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜீ.சுகுணன் டெங்கு நோய்த் தாக்கம் ஏற்படக் கூடிய அபாய நிலை குறித்து பொது மக்கள் மிக விழிப்புடன் செயற்படுமாறு கோரியுள்ளதுடன், தமது நிருவாகப் பிராந்தியத்திலுள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் டெங்கு பரவல் தொடர்பான விழிப்பூட்டல்களைப் பொது மக்கள் மத்தியில் ஆரம்பிக்குமாறும் உரிய பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுமுள்ளார்.
கொவிட் - 19 மூன்றாம் அலைவரை குறித்த வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் குறைப்பதற்குமெனத் தமது சக சுகாதாரப் பிரிவினருடன் பகீரதப் பிரயத்தனங்களை முன்னெடுத்து சாதகமான நிலமையைத் தோற்றுவித்த டாக்டர். சுகுணன்,
கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றலிலும் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்து மக்களின் நல்லபிமானத்தைப் பெற்றார்.
இந்நிலையில் புதிதாக டெங்கு பரவும் அபாயத்திலிருந்து பிராந்திய மக்களைப் பாதுகாப்பதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தற்சமயம் ஆவன செய்யப்பட்டுள்ளது.
இதற்கமையவும், பருவமழை பெய்யும் நிலை தோன்றியுள்ளதாலும், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பிராந்திய சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆறுமாத காலமாகப் பரீட்சிக்கப்பட்ட பூச்சியியல் ஆய்வு அறிக்கைக்கு அமைய டெங்கு ஒழிப்பு தொடர்பான திட்டமிடலும் வகுக்கப்பட்டுள்ளதுடன் பிராந்திய பணிப்பாளர் டாக்டர் சுகுணன் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.
இதேவேளை கல்முனைப் பிராந்தியத்தில் எட்டு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு நோய் பரவத்தக்க அதி ஆபத்தான பிரதேசங்களாக இனம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, “ஏ.டீ.எஸ்” எனும் நுளம்பினால் பரவும் டெங்கை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் முன்வந்து ஒத்துழைக்க வேண்டுமென பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். சுகுணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
குடியிருப்புக்கள், வேலைத்தளங்கள், பாடசாலைகள், வெற்றுக் காணிகள் என்பவற்றில் நீர் தேங்கி நிற்கக் கூடிய இடங்களை இல்லாது துப்பரவு செய்யவும்,
கிணறுகளை மூடிவிடவும், குறிப்பாக குடியிருப்புகளில் காணப்படும் நீர் ஏந்தும் பொருட்களை அகற்றி, டெங்கு நுளம்புகள் பெருக இடமளிக்காது இருக்கவும் பொதுமக்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எ.எல்.எம்.சலீம்