
posted 13th October 2021

ஆளுநர் அனுராதா யஹம்பத்
கொவிட்-19 நிதியத்திற்கென கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை வலுக்கட்டாயமாக அறவிடும் நடவடிக்கையைக் கைவிடுமாறு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட சுதந்திர அரச ஊழியர் சங்கம், ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள அவசர மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
கொவிட்-19 நிதியத்திற்கென கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் இம்மாத சம்பளத்தில் இருந்து ஒரு நாள் சம்பளத்தை அறவிடுவதற்கான சுற்று நிருபம் ஒன்றை கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வெளியிட்டிருப்பதை எம்மால் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது. இந்நடவடிக்கையானது எமது அரச ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையையும் விசனத்தையும்
ஏற்படுத்தியிருக்கிறது.
குறித்த சுற்று நிருபத்தை வாபஸ் பெறுமாறு மாகாண மட்டத்தில் இயங்குகின்ற சில தொழிற்சங்கங்கள், பிரதம செயலாளரிடம் விடுத்திருந்த கோரிக்கை இன்னும் அவரால் கவனத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆகையினால் இது விடயத்தில் ஆளுநரின் தலையீட்டை எதிர்பார்க்கிறோம்.
கொவிட் பிரச்சினை காரணமாக எல்லாத் தரப்பினர் போன்றே அரச ஊழியர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, பல்வேறு வகையான துயரங்களை அனுபவித்து வருகின்றனர். நாட்டில் சகல அத்தியாவசியப் பொருட்களினதும் விலைவாசி நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில், வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய முடியாமல் அரச ஊழியர்கள் திண்டாடி வருகின்றனர். இதனால் மாதாந்த சம்பளத்தை நம்பியிருக்கும் அரச ஊழியர்கள் அனைவரும் பல கஷ்டமான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
ஏனைய மாகாணங்களில் அரச ஊழியர்களிடம் கொவிட் நிதி சேகரிப்பு எதுவும் இடம் பெறாத நிலையில், கிழக்கு மாகாண அரச ஊழியர்களிடம் மாத்திரம் இதனைத் திணிப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.
கடந்த வருடமும் கொவிட்-19 முதலாவது அலையின்போது இந்நிதியத்திற்கென கிழக்கு மாகாண அரச ஊழியர்களிடம் ஒரு நாள் சம்பளம் அறவிடப்பட்டிருந்தது. ஊழியர்களின் சம்மதத்துடனேயே இந்த அறவீடு செய்யப்பட வேண்டும் என அப்போது வெளியிடப்பட்டிருந்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அவர்களது ஒப்புதல் பெறாமலும் குறைந்தபட்சம் தகவல் கூட தெரியப்படுத்தப்படாமலும் ஒரு நாள் சம்பளம் வெட்டப்பட்டிருந்தமை, மாதாந்த சம்பள சிட்டையை பார்த்த பின்னரே குறித்த ஊழியர்கள் அறிந்து கொண்டனர்.
இந்நிலையில் மீண்டும் கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தைப் பலாத்காரமாக அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இம்முறையும் ஊழியர்களின் சம்மதத்துடன் இந்த அறவீட்டை மேற்கொள்ளுமாறு சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை, இதற்கு சம்மதம் தெரிவிக்காத ஊழியர்களின் விபரங்களை சேகரிக்குமாறும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது எமது அரச ஊழியர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும்.
ஆகையினால், இவ்விடயத்தில் ஆளுநர் உடனடியாக தலையிட்டு, குறித்த சுற்று நிருபத்தை இரத்து செய்து, எமது அரச ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை அறவிடும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு வேண்டுகிறோம்- என அம்மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்