கிழக்கிற்கு ஹக்கீம் வருகை

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு முஸ்லிம் பிரதேசங்களுக்கும் விஜயம் செய்துவருகின்றார்.

நாட்டில் கொவிட் - 19 பரவல் நிலையேற்றப்பட்டதைத் தொடர்ந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல முடியாத நிலமை தொடர்ந்ததால், பிறமாவட்டங்களுக்கான அவரது வருகை தடைப்பட்டிருந்தது.

எனினும் கொவிட் - 19 வைரஸ் பரவல் வெகுவாகத் தணிந்து, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்திலிருந்தும் நாடு விடுவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது தலைவர் ஹக்கீம் வெளி மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார்.

கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த தலைவர் ரவூப் ஹக்கீம், இரு தினங்கள் அங்கு தங்கியிருந்து கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், கட்சிப் போராளிகள், பிரமுகர்களை நேரில் சென்று சந்தித்து அளவளாவியதுடன், கட்சி தொடர்பானகள நிலவரங்களையும் ஆராய்ந்தார்.

அதேபோல் இந்த வாரம் (நேற்று) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்து இன்றும் தங்கியிருக்கும் தலைவர் ரவூப் ஹக்கீம் மாவட்டத்தின் பல்வேறு முஸ்லிம் பிரதேசங்களுக்கும் வருகை தந்து சந்திப்புக்களை நடத்தி வருகின்றார்.

இதன்போது தற்போதய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பிலான முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பிலான கள நிலவரங்கள், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆவது அரசியலைமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பிலான மக்களின் விமர்சனங்கள் என்பவை தொடர்பில் பலரும் அவரது கவனத்திற்குக் கொண்டு வந்ததாகவும் அறிய முடிகின்றது.

மேலும் இன்று நிந்தவூருக்கு வருகை தந்த ரவூப் ஹக்கீம் கட்சி முக்கியஸ்தர்கள் பலரைச் சந்தித்துக் கலந்தரையாடியதுடன், நிந்தவூரிலுள்ள இரு சிரேஷ்ட ஊடகவிலாளர்களுடனும் விசேட சந்திப்பை நடத்தினார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்தப்போவதாக அரசு அறிவித்து வருகின்ற போதிலும், தேர்தல் நடக்குமா, நடக்காதா என்பதில் சந்தேகம் உள்ளதாகத் தெரிவித்த தலைவர் ரவூப் ஹக்கீம்,
அவ்வாறு கிழக்குமாகாண சபைக்கான தேர்தல் நடைபெறுமானால் முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் நிலைப்பாட்டிலேயே தற்சமயம் வரை உள்ளதாகவும் “தேனாரம்” செய்தியாளரிடம் கருத்து தெரிவித்தார்.

அத்துடன் கிழக்கில் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக வரத்தக்க அரசியல் வியூகத்தை வகுத்து செயற்படும் நோக்கு உள்ள தெனவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்துவரும் வாரங்களில் மீண்டும் கிழக்கிற்கு வருகை தந்து கட்சியின் செயற்பாடுகளுக்கு உத்வேகம் அளிக்கவுள்ளதுடன், தற்போதய அரசியல் கள நிலவரங்கள் தொடர்பாக மக்களுக்கும், கட்சி ஆதரவாளர்களுக்கும் விளக்கமளிக்கும் கூட்டங்கள், கருத்தரங்குகளை நடத்தவும் உத்தேசித்துள்ளதாக தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

கிழக்கிற்கு ஹக்கீம் வருகை

ஏ.எல்.எம்.சலீம்