காலபோகக் காலம் இது. ஆர்வமற்ற நிலையில் மன்னார் விவசாயிகள் - தலைவர் எம்.எஸ்.சில்வா
காலபோகக் காலம் இது. ஆர்வமற்ற நிலையில் மன்னார் விவசாயிகள் - தலைவர் எம்.எஸ்.சில்வா

தலைவர் எம்.எஸ்.சில்வா

மன்னார் மாவட்டத்தில் இது வரைக்கும் ஐம்பது வீதத்துக்கு மேற்பட்ட விவசாய காணிகள் காலபோகத்துக்கான பண்படுத்தும் செயல்பாட்டில் இறங்கியிருக்க வேண்டிய மன்னார் விவசாயிகள் தற்பொழுது ஐந்து வீதத்துக்கு குறைவான நிலத்தையே பண்படுத்தியிருப்பதுடன் இவ் நடப்பு வருட காலபோக நெற் செய்கைக்கு தயக்கம் காட்டுவதாக கட்டுக்கரைக்குள விவசாயிகளின் சம்மேளனத் தலைவர் எம்.எஸ்.சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் 2021ஃ2022 க்கான காலபோக நெற் செய்கையை ஆரம்பிக்க வேண்டிய மன்னார் மாவட்ட விவசாயிகள் இவ் போக செய்கையில் தற்பொழுது தயக்கம் காட்டி வருவது தொடர்பாக கட்டுக்கரைக்குள விவசாயிகளின் சம்மேளனத் தலைவர் எம்.எஸ்.சில்வாவை இது சம்பந்தமாக வினவியபோது அவர் தெரிவிக்கையில்

தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரைக்குளத்தின் கீழ் விவசாயம் மேற்கொள்ளப்படும் 31 ஆயிரம் ஏக்கரில் நெற் செய்கைப்பண்ணப்பட வேண்டிய காலம் இது.

தற்பொழுது பெய்துவரும் மழையின் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பிரதானமான குளமாகிய கட்டுக்கரைக்குளத்தில் ஒன்பது அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

விவசாயத்துக்கு எற்றவாறு மன்னாரில் தற்பொழுது மழையும் பெய்தவண்ணம் காணப்படுகின்றது.

ஆனால் இன்றைய நிலையில் மன்னார் விவசாயிகள் நெற் செய்கை பண்ணுவதில் ஆர்வமற்ற நிலையில் இருந்து வருகின்றனர்.

உரம் மற்றும் களைநாசினி இல்லாத காரணத்தினாலேயே விவசாயிகள் நெற் செய்கை செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

கடந்த வருடங்களில் இந்நேரம் ஐம்பது வீதத்துக்கு மேற்பட்ட காணிகள் நெற் செய்கைக்காக பண்படுத்தப்பட்டிருக்கும்.

ஆனால் தற்பொழுது ஐந்து வீதத்துக்கு குறைவான விவசாய நிலங்களே பண்படுத்தப்பட்டு இருக்கின்றது.

அத்துடன் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் புலுதி வேளாண்மை செய்யப்பட்டிருக்கின்றது.

புரட்டாதி மாதம் மேற்கொள்ளப்பட்ட இவ் புழுதி விவசாயம் தற்பொழுது அது இருபது நாட்கள் கொண்ட பயிராக இருக்கின்றது.

இவ் புழுதி பயிர் விவசாயத்துக்கு உரம் இடுவதற்றகான பசளை இல்லாத தன்மை இங்கு காணப்படுகின்றது.

மேலும் இவ் பயிர்களில் களையை கட்டுப்படுத்துவதற்கான களைநாசினியும் அற்ற நிலை இங்கு காணப்படுகின்றது.

இதன் காரணமாக மன்னாரில் செய்யப்பட்ட புலுதி வேளாண்மை பாதிப்பு அடையும் தன்மையிலும்

அத்துடன் இவ் வருடம் மன்னாரில் காலபோக நெற் செய்கையை விவசாயிகள் கைவிடும் அபாயம் தோன்றியுள்ளதுடன் இங்கு பஞ்சம் ஏற்படும் நிலையும் உருவாகும் ஒரு அபாயம் தோன்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

காலபோகக் காலம் இது. ஆர்வமற்ற நிலையில் மன்னார் விவசாயிகள் - தலைவர் எம்.எஸ்.சில்வா

வாஸ் கூஞ்ஞ