
posted 6th October 2021

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வினை வலியுறுத்தி இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்த்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் கல்முனை வலயக் கல்வி அலுவலகம் முன்பாக இன்று புதன் கிழமை காலை இடம் பெற்றது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் 312 கல்வி அலுவலகங்கள் முன்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டங்களின் ஓர் அங்கமாகவே மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா தலைமையில், கல்முனை வலயக் கல்வி அலுவலகம் முன்பாக சுமார் இரு மணி நேரம் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
சர்வதேச ஆசிரியர் தினத்தைக் கறுப்புதினமாகப் பிரகடனப்படுத்திய நிலையில் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான அதிபர், ஆசிரியர்கள் பங்கு கொண்டிருந்தனர்.
கல்முனை வலயக் கல்வி அலுவலகம் முன்பாக இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் பல்வேறு வாசகங்களைக் கொண்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.
“ஆசிரியர்களைக் கௌரவிக்கும் தினத்தில் அவர்களை ஆர்ப்பாட்டக் காரர்களாக்கியது யார்?”
“நாம் உரிமையைத் தான் கேட்கிறோம் புதிதாகப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கவில்லை”
“பாடசாலைகளை ஆரம்பிப்பது அதிபர், ஆசிரியர்களுடன் பேசித்தான்”
“அதிபர், ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டைத் தீர்த்துவை”
“ஜனாதிபதி அவர்களே! எங்களது பிரச்சினைகளைச் செவிமடுங்கள்”
“சாதகமான பதில் வரும் வரை போராட்டம் தொடரும்”
“புதிய பிரச்சினைகளை உருவாக்கவில்லை பழைய முரண்பாட்டை தீருங்கள் என்கிறோம்”
“ஏமாற்றும் எண்ணம் இல்லையாயின் ஏன் இந்த இழுத்தடிப்பு”
“5000 ரூபா கொடுப்பனவுக்கு அலைபவர்களல்ல நாங்கள்”
“சுபோதினி அறிக்கையே எமது இலக்கு”
என்பன போன்ற வாசகங்களைக் கொண்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் ஏந்தியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா கருத்து வெளியிடுகையில்,
“87 நாட்களையும் கடந்து எமது போராட்டம் தொடர்கின்ற போதிலும் இதற்கு சாதகமான முடிவைத்தர அரசு தயங்குவது கவலைக்குரியதாகும்.
ஆனால் அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினை தீரும் வரை எமது போராட்டம் தொடரும்.
மாணவர் கல்வியில் நாம் பெரும் அக்கறையுடன் செயற்பட்டதால்தான் வெளியான பரீட்சை முடிவுகளின்படி சிறந்த பெறுபேறுகளை மாணவர்கள் பெற்றுள்ளனர்” என்றார்.
சற்று தூரத்தில் நின்றவாறு பொலிஸார் இந்த ஆர்ப்பாட்டத்தை அமைதியாக அவதானித்த வண்ணமிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம்