
posted 19th October 2021
உரம் மற்றும் கிருமிநாசினிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பற்றாக்குறையை கண்டித்து வடக்கு- கிழக்கு மாகாணங்களில் உள்ள கமநல சேவை நிலையங்களுக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை(18) காலை 9.00 மணிக்கு கண்டன போராட்டங்கள் இடம்பெற்றன.
வடமராட்சிப் பிரதேசத்தில் கரவெட்டி, புலோலி, அம்பன் கமநல சேவை நிலையங்களுக்கு முன்பாக விவசாயிகளினால் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கண்டனப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் "உரமின்றி உழவு இல்லை" விவசாயிகளின் தற்காலிக பிரச்சனைக்கு தீர்வு கோரி கண்டன போராட்டம் எனும் பிரதான பதாகையை தாங்கி நின்றனர்.
கரவெட்டி கமநல சேவை நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற கண்டன போராட்டத்தின்போது விவசாயிகள் தோட்டங்களிலிரந்து பெயர்த்துக் கொண்டு வந்த மிளகாய் மற்றும் கத்தரி செடிகளை போராட்டத் காட்சிப் பொருளாக வைத்திருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்
"எரிபொருட்களின் விலையை உயர்த்தி வாழ்வாதாரத்தை சீரழிக்காதே"
"இரசாயன உரத்தை நிறுத்தி பசியைத் தேடாதே"
"உரத்தை தடுத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே"
"உரமில்லா நாற்றும் டொலர் இல்லா நாடும் ஒன்றே"
போன்ற சுலோக அட்டைகளை தாங்கி நின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுக்காதே தடுக்காதே உரத்தை தடுக்காதே, அடிக்காதே அடிக்காதே விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே ஆகிய கோஷங்களை எழுப்பினர்.
புலோலி கமநல சேவை நிலையத்துக்கு முன்பாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் தினேஷ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர் க.காந்தரூபன் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
அம்பன் கமநல சேவை நிலையத்துக்கு முன்பாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா.அரியகுமார் தலைமையில் போராட்டம் இடம்பெற்றது. இப்போராட்டத்தில் பிரதேசபை உறுப்பினர்களான தியாகலிங்கம், பிரசாத் உள்ளிட்டோருடன் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கரவெட்டி கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற கண்டன போராட்டத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச.சுகிர்தன் மற்றும் க.தர்மலிங்கம் தலைமையில் போராட்டம் இடம்பெற்றது. இதில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன்