கமநல சேவை நிலையங்களுக்கு முன்பாக திங்கட்கிழமை(18.10.2021) ஆர்ப்பாட்டம் நடக்கும்

வடக்கு கிழக்கில் உள்ள சகல கமநல சேவை நிலையங்களுக்கு முன்பாகவும் நாளை திங்கட்கிழமை(18.10.2021) காலை ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள உரம் மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை விவசாயிகளையும் தோட்டத்தொழிலையும் மிக மோசமாக பாதித்திருக்கின்றது.

வடக்கிலும் கிழக்கிலும் காலபோக, பெரும்போக நெற் பயிர்ச்செய்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது. ஓரிரு வாரங்களுக்குள் உரம் மற்றும் கிருமி நாசினி அத்தியாவசியமாக தேவைப்படும். இத்தேவையை உடனடியாக பூர்த்திசெய்யுமாறு கோரி வடக்கு கிழக்கிலுள்ள சகல கமநல சேவைகள் நிலையங்களுக்கு முன்பாக 18ம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.

கோவிட் தொற்று காரணமாக சிறிய எண்ணிக்கையானவர்கள், சமூக இடைவெளிகளைப் பேணி இப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பல இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெறவிருக்கும் இவ் ஆர்ப்பாட்டங்களுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமநல சேவை நிலையங்களுக்கு முன்பாக திங்கட்கிழமை(18.10.2021) ஆர்ப்பாட்டம் நடக்கும்

எஸ் தில்லைநாதன்