
posted 27th October 2021
“ஒரே நாடு, ஒரே சட்டம்” எனும் போர்வையில், முஸ்லிம் விவாக மற்றும் விகாரத்து சட்டத்தை சீர்திருத்துவதாகக்கூறி, காதி நீதி மன்றங்களை ஒழிப்பதற்கு அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கும் தீர்மானம் ஒன்று கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
முஸ்லிம் மக்கள் இரு நூற்றாண்டுகளுக்கு மேலாகவும் அனுபவித்துவரும் ஆள்சார் சட்டமான முஸ்லிம் தனியார் சட்டத்தை அதன் அடிப்படைபொறி முறைகளை இல்லாமல் செய்தவதற்கு பேரினவாத சிந்தனை கொண்ட இன்றைய அரசு முயற்சிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாதெனவும்,
இந்த விடத்தை அரசு உடனடியாக மீள்பரிசீலனை செய்ய முன்வர வேண்டுமெனவும் இந்த ஏகமனதான கண்டனத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்ட அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற இந்த மாதாந்தக் கூட்ட அமர்வில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.ரொஷான் அக்தர், மேற்படி தீர்மானம் தொடர்பான தனிநபர் பிரேரணையை சபையில் முன்மொழிந்தார்.
இதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.முகம்மட் சிபான் வழிமொழிய சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தர் சபையில் முன்மொழிந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“இந்த நாட்டு முஸ்லிம்கள் ஆண்டான்டு காலமாக அனுபவித்துவரும் முஸ்லிம் தனியார் சட்டமான, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதில் இன்றைய பேரினவாத அரசு முஸ்தீபு காட்டிவருவதுடன்,
ஒரே நாடு, ஒரே சட்டம் எனும் போர்வையில் முஸ்லிம் மக்களுக்குத் தனித்துவமான காதி நீதிமன்றங்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் முனைப்பு காட்டிவருதாகவும் அறிய முடிகின்றது.
இந்த நாட்டில் பெரும்பாண்மையினரான சிங்கவர்களுக்கென சட்டம் உள்ளது போல், சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது.
அதே போல் தமிழ் மக்களுக்கும் தேச வழமைச்சட்டம் உள்ளது. இச்சட்டங்களில் காலத்திற்குக் காலம் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுவந்தன.
ஆனால்இன்றைய அரசு ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற பேரினவாத செயற்பாடுகளின் கீழ், நாட்டின் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகளை, மத உரிமைகளை அடக்கி, ஒடுக்க முற்பட்டுள்ளமை கவலை தரும் விடயமாகும்
இந்த நிலையில் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தின் கீழான காதி நீதிமன்றம் தொடர்பில் சிலகுறைபாடுகளிருப்பின் அவற்றை இனம் கண்டு நிவர்த்தி செய்யலாம்.
ஆனால் காதி நீதிமன்றங்களை முற்றாக ஒழிப்பதற்கான முஸ்தீபுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அவ்வாறான திட்டமிடலுடனும் ஒரேநாடு ஒரே சட்டம் எனும் பேரினவாத சிந்தனையுடனும் எடுக்கப்படும் ஒழிப்பு நடவடிக்கைகளை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அரசு உடனடியாக, இவ்வாறு முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைப்பதை நிறுத்தி மீள் பரிசீலனை செய்ய முன்வர வேண்டும்” என்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.முகம்மட் சிபான் வழிமொழிந்து உரையாற்றுகையில்
கௌரவ உறுப்பினர் றோசன் அக்தரினால் முன்மொழியப்பட்ட முஸ்லிம் சட்டத்தினை மாற்றீடு செய்கின்ற அல்லது திருத்துகின்ற அரசின் திட்டத்துக்கு எதிரான தனிநபர் பிரேரணையை நான் வழிமொழிவதோடு அவரின் சமூக உணர்வினையும் பாராட்டி விடையத்துக்கு வரலாம் என நினைக்கின்றேன்.
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தினில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என கூறும் அரசும் அதனுடைய நீதி அமைச்சர் கௌரவ அலி சப்ரி அவர்களும் எவ்வாறான திருத்தம் கொண்டு வரப்போகின்றார்கள் என்பதனையோ அல்லது ஒட்டு மொத்தமாக இருபது லட்சம் முஸ்லிங்கள் இந்த நாட்டிலே இரு நூற்றாண்டுகள் கடந்து அனுபவித்து வருகின்ற உரிமையினை குழிதோண்டிப் புதைத்துவிடுகின்ற நடவடிக்கைகளிலே இறங்கியிருக்கின்றார்கள்? என்பதனையோ இன்னமும் அம்பலப்படுத்தாமல் மூடு மந்திரம் போட்டு வைத்திருக்கிறார்கள்.
சமூக மாற்றம் மற்றும் சட்டத்துறையின் வளர்ச்சி என்பவற்றின் மூலம் நூற்றாண்டு கடந்து அனுபவிக்கும் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திலே குறைகள் இருப்பின் அதனை கடந்த காலங்கிலே திருத்தங்கள் செய்து நடைமுறையில் உள்ளதனைப்போல் நடைமுறைப்படுத்த இந்த நாட்டிலே வாழும் முஸ்லிம்கள் ஒரு போதும் பின்னிற்கப்போவதில்லை. ஆனால் அதில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும்.
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் இன்றைய கால கட்டத்தில் எதிர்பார்த்து வேண்டி நிற்கின்ற சில திருத்தங்கள் உள்ளன” என்றார்.
இக்கண்டன் பிரேரணை ஏகமனதாக நிறைவேறுவதற்கு சபையஙின் தமிழ் உறுப்பினர்களும் ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி, பிரதமர். நீதி அமைச்சர் ஆகியோருக்கு தீர்மானத்தின் பிரதிகளை அனுப்புவதெனவும் முடிவுசெய்யப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம்