
posted 16th October 2021
காலப்போகத்தில் கட்டுக்கரைக்குளத்தின் கீழ் 31,339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்கை செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிர் செய்கையின்போது கால் நடைகளை புல்அறுத்தான் கண்டல், பெருவழி, தேத்தாவாடி ஆகிய இடங்களில் பட்டி அமைத்து பராமரிக்க வேண்டும் எனவும் கால்நடை பண்ணையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என மன்னார் அரசாங்க அதிபர் திருமதி திருமதி ஸ்ரான்லி டீமெல் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் பிரதான குளமாகிய கட்டுக்கரைக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் 2021, 2022 ஆம் ஆண்டுக்கான பெரும்போக பயிர் செய்கை கூட்டமானது வியாழக்கிழமை (14.10.2021) உயிலங்குளம் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இதில் விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட சகல திணைக்களத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக மன்னார் அரசாங்க அதிபர் தெரிவிக்கையில்;
இக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் பயிர் செய்கை அபிவிருத்தி சம்பந்தமான விடங்கள் ஆராயப்பட்டது. இதன் அடிப்படையில் தற்பொழுது கட்டுக்கரைக்குளத்தில் 7 அடி 8 அங்குலம் நீர் உள்ளது. அத்துடன் விவசாயிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள சிறு குளங்களிலிருந்து நீர் வினியோகம் செய்வதற்காக அவற்றைத் தயார் நிலையில் வைத்துள்ளோம். இந்நீர் வினியோகம் 31,339ஏக்கர் பயிர்களுக்கு போதுமானதாக இருக்கும். மேலும் இந்நீர் வினியோகம் இவ் வருட காலப்போகத்திற்கு கட்டுக்கரைக்குளத்திலிருந்து முதலாவது நீர் பாய்ச்சல் 26.10.2021 அன்று ஆரம்பிக்கப்பட்டு 28.02.2022 வரைவினியோகிக்கப்படும்.
எனவே, இக்காலபோக வேளான்மையின் போது தத்தமது கால் நடைகளை புல்அறுத்தான் கண்டல், பெருவழி, தேத்தாவாடி ஆகிய இடங்களில் பட்டி அமைத்து பராமரிக்க வேண்டும் எனவும் கால்நடை பண்ணையாளர்களுக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இக் கால்நடைகளை பராமரிப்பதற்காக ஐம்பது கால்நடைகளுக்கு ஒருவர் என்ற வீதத்தில் வேலையாட்களை அமர்த்தும்படியும் பண்ணையாளர்களுக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது என அரச அதிபர் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ