
posted 11th October 2021
தற்பொழுது உள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தின் பிரதானமான குளமாகிய கட்டுக்கரைக்குளத்தில் நடப்பு வருட காலபோகத்துக்கான நீர் காணப்படுவதால் காலதாமதமின்றி பயிர் செய்கையை அரச அதிபரின் தலைமையில் நடைபெறும் விவசாய சம்பந்தமான கூட்டத்தை தொடர்ந்து உடன் மேற்கொள்வது என இது சம்பந்தமான முன்னோடி கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் கட்டுக்கரைக்குள திட்ட முகாமைத்துவக் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது;
மன்னார் மாவட்டத்தைப் பொருத்தமட்டில் சிறுபோகம் மற்றும் காலப்போகம் மன்னார் மாவட்டத்திலுள்ள பிரதானமான குளமாக விளங்கும் கட்டுக்கரைக்குளத்து நீரைக் கொண்டே விவசாயிகள் தங்கள் பயிர் செய்கையை ஆரம்பிப்பது வழமையாகும்.
அந்த வகையில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான காலபோக பயிர் செய்கைத் தொடர்பாக முன்னோடிக்கூட்டம் கடந்த வாரம் (07.10.2021) இடம்பெற்றது.
இம் முன்னோடிக் கூட்டத்தில் நடப்பு வருட காலபோக பயிர் செய்கை தொடர்பாக அரச அதிபர் தலைமையில் நடக்கப்போகும் முக்கிய கூட்டத்தில் முன்வைப்பதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, தற்பொழுது கட்டுக்கரைக்குளத்தில் 07 அடி அதாவது 13900 ஏக்கர் அடி நீர் காணப்படுவதாலும், அத்துடன் இக் குளத்துக்கு உள்வரத்து வாய்க்காலில் நீர் வருகை 5 அங்குலமாக காணப்படுவதாலும், அனைத்து பிரதான வாய்க்காள்களின் கீழ் வரும் 24438 ஏக்கர் பரப்புகளிலும் செய்கை பண்ணப்படலாம் என நீர்பாசனப் பொறியியலாளர் சிபாரிசு பண்ணியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இக் காலபோகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நெல்லினம், முதல் நீர் விநியோகம், விதைப்பு இறுதித் திகதி, கால்நடைகளைக் கட்டும் இறுதித் திகதி போன்ற முக்கிய விடயங்களையும் வியாழக்கிழமை (14) அரச அதிபர் தலைமையில் நடைபெற இருக்கும் கட்டுக்கரைக்குளத்தின் கீழ் பயிர் செய்கை தொடர்பான முக்கிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட இருப்பதாகவும் இம் முன்னோடிக் கூட்டத்தில் தீர்மானமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ