
posted 2nd October 2021
வடமராட்சி கிழக்கில் பாரம்பரிய மீன்பிடி தொழில்களான கரவலை மற்றும் சிறு தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம்பெறவிருக்கும் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்;
கடந்த காலத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப் பாரிய அளவிலான போராட்டங்களும் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றிருந்தன.
நடைபெற்ற போராட்டங்களில் வடமராட்சி கிழக்கு மக்கள் முழுமையாக பங்கெடுத்திருந்தார்கள்.
சம்பந்தப்பட்ட மக்களை அழைத்து அரசாங்க அதிபர் அலுவலகத்தில் பல தடவைகள் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. நாங்களும் இந்த விடயம் தொடர்பில் பல கல்விமான்களை உள்வாங்கி அவர்களும் கடல்நீரை நன்னீராக்குவதால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்கள். அந்தக் கருத்துக்களை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற உரையாடலில் ஏற்றுக் கொண்டு நல்ல செய்தி ஒன்று தரப்பட்டது.
இதனடிப்படையில் வடமராட்சி கிழக்கில் ஆறுமுகம் திட்டத்தை அமல்படுத்துவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. தெளிவாகச் சொல்லப்படவேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்ற கீழ்த்தரமான எந்த ஒரு எண்ணமும் எங்களிடம் இல்லை. நிச்சயமாக எங்கள் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் பல இடங்களில் தோல்வி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதனால் ஆறுமுகம் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். வடமராட்சி கிழக்கில் மணக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரை பாரம்பரிய கரவலை தொழிலேயே ஈடுபடுகின்றனர். இதில் ஒரு கரவலையில் குறைந்தது 30 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.
60க்கும் மேற்பட்ட கரவலைப் பாடுகளைக் கொண்ட எமது பிரதேசத்தில் இந்த கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டால் அந்த தொழில்கள் முற்றுமுழுதாக பாதிப்படையும். கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் இடம் பெறவுள்ளதாக குறிப்பிடுகின்ற அந்தப் பகுதிக்கு உள்ளேயே ஐந்து கரைவலைப்பாடுகள் உள்ளன.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று அப்போதும் சரி இப்போதும் சரி நாங்கள் மாற்றுக்கருத்து வைத்துக் கொள்ளவில்லை. இவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டுதான் அவர்கள் ஆறுமுகம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக எங்களுக்கு உறுதியளித்திருந்தனர்-என்றார்.

எஸ் தில்லைநாதன்