எம். ஏ. சுமந்திரன் தலைமையில் நடைபெற்ற இழுவை படகு கவனவீர்ப்பு போராட்டத்தை எதிர்க்கும் குருநகர் மீனவர்கள்

இழுவை படகுகளை தடை செய்யுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரையான கவனவீர்ப்பு போராட்டத்துக்கு குருநகர் பகுதி மீனவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

நேற்றைய போராட்டத்தை முன்னெடுப்போர், எந்த இழுவை படகுகளை தடை செய்ய வேண்டும் என குறிப்பிடாமல், போராட்டத்தை மேற்கொள்வது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

மேலும், குருநகர், வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளில், அதிகளவான ட்ரோலர் படகுகளில் சென்றே, மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரையான மீனவர்களை பிரிதிநிதித்துவபடுத்தியே இன்றைய போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறினர்.

பாராளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கமையவே ஒரு சில மீனவ சங்கங்களின் ஆதரவுடன் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 'யாருடைய படகை தடை செய்ய வேண்டும்? இந்திய மீனவர்களின் படகுகளையா? அல்லது யாழ். மாவட்டத்தில் ட்ரோலர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் படகுகளையா? என கேள்வி எழுப்புகிறோம்.

'இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியால் மீன்பிடி படகு ஒன்று, நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து முற்றாக சேதமாக்கப்பட்டது. இது தொடர்பில் குரல் எழுப்பாத பாராளுமன்ற உறுப்பினர், எங்களுடைய மீன்பிடி முறைமையை மாற்ற வேண்டும், அவற்றை தடை செய்ய கோரி போராட்டத்தை மேற்கொள்கின்றார்' எனவும், குருநகர் மீனவர்கள் சாடினர்.

எம். ஏ. சுமந்திரன் தலைமையில் நடைபெற்ற இழுவை படகு கவனவீர்ப்பு போராட்டத்தை எதிர்க்கும் குருநகர் மீனவர்கள்

எஸ் தில்லைநாதன்