
posted 9th October 2021
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களது இழுவைமடி றோளர் படகுகளின் அத்து மீறலால் பல நூற்றுக் கணக்கான மீனவர்களது வலைகள் அறுத்து அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடமாகாண மீனவர்களின் இணையம் ஆகியன இணைந்து பாதிக்கப்பட்ட மீனவர்களை நேற்று வெள்ளிக்கிழமை (08) நேரில் சென்று கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
இதன் போது இத்திய இழுவைப் படகினால் வெட்டி அழிக்கப்பட்டு மீளவும் பயன்படுத்த முடியாத வலைகளையும் பார்வையிட்டனர்.
வடமாட்சி கிழக்கு மீனவர்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது அங்கு வருகை தந்த பிரதிநிதிகளிடம் கருத்து தெரிவிக்கும் போது இந்திய இழுவைப் படகுகள் கரையில் இருந்து சுமார் 100 தொடக்கம் 300 மீட்டர் வரையான பகுதிக்கு வந்து எமது வலைகளை அறுத்து நாசம் செய்கின்றன.
வெளிச்சம் போடாமல் இருட்டில் வந்து இழுவைமடித் தொழிலை மேற்கொள்கின்றனர். இதனால் எமது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் எமது படகினை கடலில் இறக்க முடியாத நிலையில் மேலே ஏற்றி விட்டுள்ளோம். வங்கிகளில் கடனைப் பெற்று வலைகளை வாங்கி தொழில் செய்ய முற்பட்டால் வலைகளை வெட்டி அழிக்கும் இந்திய இருவைப் படகுகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் விபரீதமனா முடிவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இச் சந்திப்பின் போது தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் மற்றும் வடக்கு மீனவர்களின் இணையத் தலைவர் வி.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன்