
posted 22nd October 2021

வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்
தற்போது தென்னிலங்கையில் நடக்கும் சிவில் பொலிசாரின் கைதினை கடத்தல் என்று கூப்பாடு போடும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிங்கள தேசமும் கடந்த காலத்தில் அப்பாவித் தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வலியை இனியாவது புரிந்து கொள்ளவார்களா? ஒருமித்த குரல் ஒலிக்கும் போது தான் இலங்கைத் தீவில் நிரந்தர அமைதியும் நீதியும் நிலை நாட்டப்படும். வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தனது ஊடகச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
1979 ஆண்டில் இருந்து சிங்கள இனவாத அரசாங்கங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை கையில் எடுத்து கேட்டுக் கேள்விகள் இன்றி பல ஆயிரக்கணக்கில் தமிழர்களை கடத்தி பலரை தெருநாய்களாக சித்திரவதை செய்து வீதிகளில் சுட்டு பிணங்களாக போட்டதையும், இருபதாயிரத்திற்கு அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டத்தையும், நூற்றுக் கணக்கானோர்அரசியல் கைதிகளாக பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டதையும், அதன் வலியையும் அவலத்தையும் தற்போது சிங்கள தேசம் உணருமா? அவ்வாறு உணர ஆரம்பித்தால் சகோதர இனமான தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற மனிதநேயக் குரல் தென்னிலங்கையில் சிங்கள தேசத்தில் ஒலிக்குமா? காலம் தான் விடை தரவேண்டும்.
தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த தங்களது ஆட்சியில் தமிழர்கள் மீது பாரிய இனப்படுகொலையை நடாத்தி முடித்தனர். அப்பொழுது சிங்கள, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழின அழிப்புக்கு ஆதரவு வழங்கினார்கள். பாரிய அழிவு தமிழர்களுக்கு நடந்து முடிந்த பின்னர் கூட ஆதரவு வழங்கிய தரப்புக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனியாவது நீதியை வழங்குங்கள் என்று உள் நாட்டிலும் சர்வதேச சமவாயங்களிலும் குரல் கொடுக்க முன்வரவில்லை. இந்த வலி தமிழர்களின் ஆழ் மனதை கிழித்துக் கொண்டு இருந்தாலும் சிங்கள, முஸ்லிம் தரப்பின் பாதிப்புக்கு அவ்வப்போது தமிழர் தரப்பு குரல் கொடுக்க தவறியதில்லை. இந்த உண்மையை வரலாறு மறக்காது.
கோட்டாய ஆட்சியின் ஆரம்பத்தில் ரிசாட் பதியூதின் அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது இந்த நாட்டில் ஒரு இனம் 30 ஆண்டுகள் போரை நடாத்தியதால் தான் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்தது என்று பாதிக்கப்பட்ட தமிழர்களை ஏறி மிதித்துப் பேசினார்.
இதே ரிசாட் கடந்தகாலங்களில் பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் கைகளை உயர்த்தினார். இன்று தன்மீது சட்டம் பாய்ந்ததும் எப்படி பாராளுமன்றத்தில் அலறுகிறார். தமிழருக்கு எதிராக இவ்வளவு செயலை ரிசாட் புரிந்தாலும் ரிசாட்டை விடுதலை செய்யக் கோரும் மனுவில் தமிழ்த் தேசிய பாராளுமன்ற உறுப்பினரான கஐேந்திரகுமார் உள்ளிட்டோர் கையொப்பம் இட்டுள்ளனர் இதனை முஸ்லிம் சமுதாயம் புரிந்து கொள்ளுமா?
அண்மையில் சர்வதேச பல்கலைக்கழக செயற்பாட்டாளர் சிவில் சீருடைப் பொலிசாருடன் கைது செய்த விடையத்தை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் மன்றில் சுட்டிக் காட்டி கைது விடயம் ஐனநாயகத்திற்கு எதிரானது என தெரிவித்து பாதிக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளருக்கு நீதி கோரினார். இதனை சிங்கள தேசம் புரிந்து கொள்ளுமா?
ஆகவே சிங்கள இனவாத அரசாங்கம் தங்கள் ஆட்சிப் பதவிகளுக்காக தமிழர்களுக்கு எப்படி ஒரு அநீதியை இழைத்தார்களோ அதே செயற்பாட்டை தற்போது ஆரம்பமாக இலங்கையில் வாழும் ஏனைய சமூகங்களிடமும் திருப்பி உள்ளனர்
இதனை அனைத்து சமூகங்களும் உணர்ந்து கொண்டு ஒருமித்த குரலில் நீதிக்கு குரல் கொடுக்குமா? அவ்வாறான குரல் ஒலிக்கும் போது தான் இலங்கைத் தீவில் நிரந்தர அமையும் நீதியும் நிலை நாட்டப்படும்.

வாஸ் கூஞ்ஞ