
posted 8th October 2021
சுகாதார சேவைகள் பணியாளர்களாகிய ஆகிய நாம் எமது நியாமான கோரிக்கைகளை முன்வைத்து நான்காவது தடவையாக நாங்கள் இப் போராட்டத்தை நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பு இல்லாதவாறு நடாத்துகின்றோம். ஆனால், இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் அதற்குரிய நடவடிக்கைகள் எடுத்து எமது நியாயமான கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தவறும் பட்சத்தில், எதிர்காலத்தில் நோயாளிகளுக்கு எற்படும் எல்லா அசௌரியங்களுக்கும் அரசே பொறுப்பு ஏற்க வேண்டி நேரிடும் கூற நேரிடும் என மன்னார் மாவட்ட ஜனகஜ சுகாதார சேவைகள் சங்கத்தினதும் வட மாகாணத்தின் தலைவருமான எஸ்.எச்.எம்.இல்ஹாம் தெரிவித்தார்.
இப் பணித் தவிர்ப்புப் போரட்டமானது இன்று வெள்ளிக்கிழமை (08.10.2021) 41 சுகாதார தொழிற் சங்கங்கள் இணைந்து ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து நாடு பூராகவும் நடத்தினார்கள். இது மன்னார் பொது வைத்தியசாலையிலும் காலை 7 மணி தொடக்கம் நண்பகல் ஒரு மணிவரை இடம்பெற்றது.
இது தொடர்பாக எஸ்.எச்.எம்.இல்ஹாம் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;
இன்று நாங்கள் நான்காவது தடவையாகவும் இப் போராட்டத்தை எமது நியாமான கோரிக்கைகளுக்காக முன்னெடுத்து வருகின்றோம்.
எமக்குக் கிடைக்க வேண்டிய இச்சலுகைகள் எமது நாட்டிலுள்ள சக சுகாதார ஊழியருக்குக் இருப்பது போல எமக்கும் கிடைக்க வேண்டிய உரிமையே.
எமக்கு ஆரம்பத்திலிருந்து இந்த கோவிட் காலத்தில் வழங்கப்பட்ட7500 ரூபா கொடுப்பனவு இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் எமது கடமையை எந்த விதமான குறைபாடுகளின்றி செய்வதில் மிகவும் அவதானமாக இருப்பதுமல்லாமல் செய்யத் தவறவுமில்லை என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அதாவது, இப் போராட்டத்தில் எந்த விதத்திலும் வைத்திய சாலைக்கு வரும் நோயாளிகளுக்கோ அல்லது உள்ளிருக்கும் நோயாளிகளுக்கோ எவருக்கும் எந்தவிதப் பாதிப்புமில்லாமல் எமது கடமையில் வெகு கவனமாக இருக்கின்றோம்
ஆனால் இச்சலுகையானது இந்த 41 தொழிற் சங்கங்களைச் சார்ந்த ஊழியர்களைத் தவிர்ந்த ஒரு சாராருக்கு மட்டும் வழங்குவதென்பது நம்மையெல்லாம் ஓரம்கட்டி இந்த அரசு எம்மைப் பழிவாங்குகிறதென்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
எனவே இக் கொடுப்பனவு கோவிட் காலம் முடியும் வரை எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
ஆகவே எங்கள் நியாயமான இவ் விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், சுகாதார திணைக்கள அதிகாரிகள் யாவரும் எங்கள் கோரிக்கைகளை முழுமையாகவும், எதுவித குறைபாடுகளின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி நிற்கின்றோம்.
இதன் பின்பும், எமது நியாயமான இக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் நாடு பூராகவும் எமது போராட்டம் கவனயீர்ப்பு போராட்டமாக இல்லாமல், விடுமுறையிலான பணி பகிஷ்கரிப்பு போராட்டமாகவே அமைய இருக்குமென்பதை முற்கூட்டியே இப்போது கூறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதனால் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளின் அசௌரியங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டி எற்படும் என நாங்கள் தெரிவித்து நிற்கின்றோம்.
மேலும், எங்கள் மன்னார் மாவட்டம் உட்பட இலங்கை பூராகவும் எமது பல தொழிற் சங்கங்கள் இணைந்து எங்களுக்கான நியாமான இக் கோரிக்கைகளை முன்வைத்து திங்கள் கிழமை (27.09.2021) பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இன்று (07) காலை 7 மணி தொடக்கம் நண்பகல் ஒரு மணி வரை இப் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இப் போராட்டத்தில் நாங்கள் நியாயமான கோரிக்கைகளையே முன்வைத்து சுகாதார அமைச்சரிடம் தீர்த்து வைக்கும்படி கோரி நிற்கின்றோம். ஆனால், இப்போராட்டத்தில் வைத்தியசாலைக்கு வரும் எந்த நோயாளிகளுக்கும் எந்தவித பாதிப்புமில்லாமல் எமது கடமையில் கண்ணாயிருக்கின்றோம்.
எனவே, இது சம்பத்தப்பட்டவர்கள் உடனடியாக இதற்கு ஒரு சாதகமான முடிவு தரவேண்டுமெனவும், எம்மையும், இந் நாட்டிலுள்ள நோயாளிகளுக்கும் அசௌகரித்தையும் கருத்திற்கொண்டு அவர்கள் செயற்படுவார்கள் என நம்புகின்றோம்.

வாஸ் கூஞ்ஞ