
posted 17th October 2021
இழுவைப் படகுகளையும் தடைசெய்யப்பட்ட வலைகளையும் தடைசெய்யும் 2017 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க சட்டமூலத்தை முறையாக நடைமுறைப் படுத்துமாறு கோரி முல்லைத்தீவு கள்ளப்பாட்டிலிருந்து பருத்தித்துறை துறைமுகம் வரையில் படகுப் பேரணி ஒன்று இடம்பெற்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (17.10.2021) காலை 7 மணியளவில் முல்லைத்தீவு கள்ளப்பாட்டிலிருந்து ஆரம்பமான படகுப் பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் .ஏ. சுமந்திரன்,சி. சிறிதரன், இ.சாணக்கியன் ஆகியோர் தலைமையில் ஆரம்பமானது.
அங்கிருந்து ஆரம்பமாகி கடல் வழியாக புறப்பட்ட படகு பேரணியில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, ஆழியவளை, உடுத்துறை, தாளையடி, செம்பியன்பற்று, நாகர்கோவில், குடத்தனை, மணற்காடு, கற்கோவளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கடற்றொ தொழிலாளர்கள் தங்களது படகுகளுடன் இப்பேரணியில் இணைந்து கொண்டனர்.
இப்பேரணியில் பருத்தித்துறை துறைமுகத்திற்கு அப்பால் உள்ள சுப்பர்மடம், பொலிகண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் தமது படைகளுடன் கற்கோவளம் கடற்பகுதியில் காத்திருந்து பேரணியுடன் இணைந்து கொண்டனர்.
கள்ளப்பாட்டில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்ட படகுப் பேரணி முற்பகல் 10 மணிக்கு பருத்தித்துறை துறைமுகத்தில் நிறைவடைந்தது.
நூற்றுக்கணக்கான படகுகளில் பேரணியாக வந்தோர்
"இழுவைப் படகுகளை தடைசெய்"
"எங்கள் கடல் எங்களுக்கே உரிமை"
ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு பருத்தித்துறை துறைமுகத்தை கரை சேர்ந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களுடன் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான து.ரவிகரன், ச.சுகிர்தன், வே.சிவயோகன், கேசவன் சயந்தன், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.
பேரணியின் முடிவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இ.சாணக்கியன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ,கடற்றொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன்