
posted 14th October 2021
வடமராட்சிக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுடன் ஏற்பட்ட மோதலில் பருத்தித்துறை முனை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் மீன்பிடி நடவடிக்கைக்காக பருத்தித்துறை மீனவர்கள் படகுகளில் சென்றிருந்தனர். அதன்போது வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் இந்திய மீனவப் படகுகள் ஈடுபட்டிருந்தன.
அதேவேளை, பருத்தித்துறை மீனவர்களின் வலைகளும் இந்திய ட்றோலர் படகுகளால் அறுக்கப்பட்டிருந்தன.
சம்பவத்தை அடுத்து இது தொடர்பில் இரண்டு தரப்புக்கும் இடையில் கை கலப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது இந்திய மீனவர்கள் கூரிய ஆயுதங்கள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தியதாகவும் சம்பவத்தின்போது முனைப் பகுதியைச் சேர்ந்த தீபன், சுரேஸ்குமார், ரவிக்குமார் ஆகிய மீனவர்கள் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்திய மீனவர்கள் தாக்குதலுக்கு தயாராக கற்கள் உட்பட்ட பொருள்களை எடுத்துவந்திருந்தாகவும் பருத்தித்துறை மீனவர்கள் கூறினர்.
மோதல் தீவிரமடைந்த நிலையில் இலங்கை கடற்படையினர் அங்கு சென்றபோது இந்திய மீனவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் என சம்பவத்தை நேரில் பார்த்த பருத்தித்துறை மீனவர்கள் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன்