
posted 21st October 2021
வியட்நாம் பௌத்த விகாரையொன்றை இலங்கையில் நிறுவுதல் மற்றும் இரு நாட்டு மதத் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் இடையே கல்வி பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுத்து செல்வது குறித்து வியட்நாம் தூதுவர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையே இடம்பெற்ற சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தீ தான் ட்ருக் அவர்கள் புதன் கிழமை (20) பிற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார்.
எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கை மற்றும் வியட்நாம் இடையே இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தூதுவர் ஹோ தீ தான் ட்ருக் அவர்கள் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.
வியட்நாமிலிருந்து இலங்கைக்கு முதலீடுகளை பெற்றுக் கொள்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்த தூதுவர் 2019ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியது என சுட்டிக்காட்டினார்.
முதலீடுகளுக்கு மேலதிகமாக இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான பௌத்த உறவை மேம்படுத்துவதற்கு தமது நாடு ஆர்வத்துடன் காணப்படுவதாகவும் தூதுவர் இதன்போது வலியுறுத்தினார்.
இதற்கு உடன்பாடு தெரிவித்த கௌரவ பிரதமர் வரலாற்று சிறப்புமிக்க பௌத்த உரிமையை அடிப்படையாகக் கொண்டு இரு நாட்டு மக்களுக்கும் முக்கியமான வகையில் பரஸ்பர உறவை உறுதிபடுத்த முடியும் என சுட்டிக்காட்டினார்.
வியட்நாம் பௌத்த விகாரையொன்றை இலங்கையில் நிறுவுதல் மற்றும் இரு நாட்டு மதத் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் இடையே கல்வி பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுத்து செல்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. சுமார் நூறு வியட்நாம் பௌத்த பிக்குமார் இதுவரை இலங்கையில் கல்வி பயின்று வருகின்றனர்.
பாராளுமன்ற உறவை மேம்படுத்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் இருநாடுகளுக்கும் இடையே தற்போது காணப்படும் ஒத்துழைப்பு வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கான வியட்நாம் தூதுவராக ஹோ தீ தான் ட்ருக் அவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் சேவையாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ