
posted 22nd October 2021
விவசாயச் செய்கைக்கு தேவையான இரசாயன உரப்பசளை இறக்குமதியை அரசாங்கம் தடை செய்துள்ளமையைக் கண்டித்தும், பெரும்போக நெற்செய்கைக்கு இரசாயன உரப்பசளையான யூரியாவையே வழங்குமாறு கோரியும் நிந்தவூர்ப் பிரதேச விவசாயிகள் நேற்று (வெள்ளி) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இலங்கையின் நெல் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் அம்பாறை மாவட்டத்தின் பிரதான விவசாயப் பிரிவான நிந்தவூர் கம நல சேவைகள் மத்திய நிலைய பிரிவு விவசாயிகளே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
நிந்தவூர் விவசாய அமைப்புகளின் ஒன்றியத்தினால், நிந்தவூர் செட்டியா வட்டை விவசாயப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன்,
அங்கிருந்து நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையம் வரை விவசாயிகள் ஆர்ப்பாட்டப் பேரணியாகச் சென்றதுடன், மத்திய நிலையம் முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“அரசின் இயலாமையை விவசாயிகள் மீது திணிக்காதே”
“விவசாயிகளுக்குத் தேவயான யூரியா உரத்தை வழங்கு”
“அரசே, நெல் உற்பத்தியைப் புறக்கணித்து நாட்டில் பஞ்சத்தை உருவாக்காதே”
“இறக்குமதி செய்யும் அரிசியில் நஞ்சு இல்லையா”
"உரம் இன்றி உழவு இல்லை”
“சோளம், கரும்பு செய்கைக்கு யூரியா வழங்கும் அரசு நெற் செய்கைக்கு வழங்க மறுப்பது ஏன்?”
என்பன போன்ற வாசகங்களைக் கொண்ட சுலோக அட்டைகளை விவசாயிகள் ஏந்தியிருந்தனர்.
அத்துடன் பல்வேறு கண்டன கோஷங்களையும் எழுப்பிய விவசாயிகள், தமக்கு பெரும்போக நெற்செய்கைக்கு யூரியா உரத்தையே வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.
பெரும் போக நெல்விதைப்புக்கான காலம் நீடித்துச் செல்வதால் யூரியா பசளை வழங்கும் முடிவை அரசு அவசரமாக எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.
இந்த பாரிய ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தமக்கு வழக்கம் போல் யூரியா இரசாயன உரப்பசளையை வழங்குமாறு ஜனாதிபதி, பிரதமர், விவசாய அமைச்சர் ஆகியோரைக் கோரும் மகஜர் ஒன்றை, நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலைய பெரும்பாக உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.ஹார்லிக்கிடம் விவசாயப் பிரதி நிதிகள் கையளித்தனர்.
பெருந்தொகையான விவசாயிகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்