இரங்கல் உரை - மாநகர மேயர் வி.மணிவண்ணன்
இரங்கல் உரை - மாநகர மேயர் வி.மணிவண்ணன்

மாநகர மேயர் வி.மணிவண்ணன்

யாழ். நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் இழப்பானது தமிழர்களாகிய எமக்குப் பாரிய இழப்பு என்று யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

"அவரது இறுதிக் காலத்தில் அவரோடு பழகும் வாய்ப்பும் அவரிடம் ஆசீர்வாதம் பெறும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது.

மிகச்சிறந்த பண்பாளன்; எல்லாவற்றுக்கும் மேலாக ஆடம்பரமோ பந்தாவோ அற்ற எளிமையின் வடிவமான மிகச்சிறந்த மனிதன்; மிகச்சிறந்த நிர்வாகி அவர்.

அவர் எம்மைப் விட்டு பிரிந்தபோதும் அவருக்கு நிகரான அல்லது ஒருபடி மேலான தனது புதல்வனை எமக்குத் தந்திருக்கின்றார்.

இன்று யாழ். மாநகர சபை தற்காலிகமாக இயங்குகின்ற இடம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு உரித்தான இடம். போரினால் நகரில் இருந்த மாநகர சபைக் கட்டடம் இடிந்து அழிந்தபோது அதனைத் தற்காலிகமாக இயக்க ஓர் இடம் தேவைப்பட்டது. அந்த இடத்தை இலவசமாக மாநகர சபைக்குத் தந்துதவியவர் இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரே ஆவார்.

யாழ். நகரில் தற்போது மிகக் கம்பீரமாக கட்டி எழுப்பப்பட்டு வரும் மாநகர சபைக்கான நகர மண்டப கட்டடத் தொகுதி இலங்கையின் மிகச்சிறந்த கட்டட கலை வல்லுநர்களில் ஒருவரான இவரது புதல்வனின் வடிவமைப்பிலேயே அமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசால் கட்டி முடிக்கப்பட்டு மாநகர சபையிடம் கையளிக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தின் வடிவம் தொடர்பில் கட்டட கலை நிபுணர்களிடையே ஒரு போட்டி நடத்தப்பட்டது. அப்போட்டியாளர்களுக்கு மத்தியில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நடுவர்களுள் ஒருவராகவும் இவரது புதல்வன் செயற்பட்டார்.

யாழ். மாநகர சபைக்கும் நல்லூர் உற்சவ காலத்துக்குமான தொடர்பு விபரிக்க வேண்டிய ஒன்றல்ல.

அந்தவகையில் மாநகர சபைக்கும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கும் அதன் நிர்வாகிகளுக்குமான பந்தம் நீண்டது; ஆழமானது.

அந்தவகையில் அவரது இழப்பு தமிழர்களாகிய எமக்குப் பாரிய இழப்பு. அவரது பிரிவால் துயர் உற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், பக்தர்கள் அனைவருக்கும் எனதும் மாநகர சபையினதும் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாரது ஆத்மா சாந்தி அடைய நல்லூர் கந்தனை வேண்டுகின்றேன்" - என்றுள்ளது.

இரங்கல் உரை - மாநகர மேயர் வி.மணிவண்ணன்

எஸ் தில்லைநாதன்