
posted 18th October 2021

இரா. சாணக்கியன் பா.உ.
இலங்கை அரசாங்கத்தின் மீன்பிடி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, இலங்கை சட்டத்திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தாமையாலேயே வடக்கு- கிழக்கில் வாழும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு - பருத்தித்துறை வரையான படகுகள் பேரணியில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், இந்தப் போராட்டமானது இந்தியா மற்றும் தமிழ்நாடு
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமோ அல்லது இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டமோ அல்ல எனக் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு மீனவர்களில் ஒரு சிலர் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை, மீன்பிடித்துறை அமைச்சர் பார்த்தும் பாராது செயல்படுவதற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரின் இந்த அசமந்தச் செயல்பாடானது தமிழ் நாடு மற்றும் வடக்கு- கிழக்கு வாழ் மீனவர்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையிலான நல்லுறவு பாதிக்கப்படும். எனவே, மீன்பிடித்துறை அமைச்சர் வடக்கு- கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்- என்றார்.

எஸ் தில்லைநாதன்