
posted 9th October 2021

உலக அஞ்சல் தினம் இன்று சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் சிறப்புற கொண்டாடப்பட்டது.
1874 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில் “சர்வதேச தபால் ஒன்றியம்” ஸ்தாபிக்கப்பட்டதுடன் இதை நினைவு கூரும் முகமாக வருடாந்தம் இதே தினம் உலக அஞ்சல் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி 147 ஆவது உலக அஞ்சல் தினத்தையொட்டிய சிறப்பு நிகழ்வுகள் நாடெங்கும் இன்று நடைபெற்றன.
இத்தினத்தையொட்டிய பிரதான நிகழ்வு கொழும்பு அஞ்சல் திணைக்கள தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன் விசேட இரத்ததான முகாம் மற்றும் மர நடுகை நிகழ்வுகளும் நடைபெற்றன.
அஞ்சல் மாஅதிபர் ரஞ்சித் ஆரிய ரத்னவின் வழிகாட்டுதலிலும், தலைமையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதான தேசிய நிகழ்வில் ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இதன் போது உலக அஞ்சல் தினத்தையொட்டிய இலங்கையின் விசேட நினைவு முத்திரை ஒன்று வெளியிடப்பட்டதுடன், முதல் நாள் உறையும் அமைச்சரால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நிந்தவூரில், இதேவேளை நிந்தவூர் பிரதம தபாலகத்தில் உலக அஞ்சல் தின நிகழ்வுகள் சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டு இன்று நடைபெற்றன.
நிந்தவூர் பிரதம தபாலதிபரும், அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர் சங்க பொதுச் செயலாளருமான யூ.எல்.எம். பைஸர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தபாலக வளாகத்தில் மரநடுகை மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம்பெற்றது.
பிரதம தபாலதிபர் யூ.எல்.எம்.பைஸர், உதவி தபாலதிபர் எம்.ஜே.எம். சல்மான் உட்பட தபாலக சிரேஷ்ட ஊழியர்கள் பலரும் மரக்கன்றுகளை நட்டனர்.
நிகழ்வில் பிரதம தபாலதிபரும், அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கப் பொதுச் செயலாளருமான யூ.எல்.எம்.பைஸர் உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“தபால் சேவை பொது மக்களுக்கு இன்றியமையாத முக்கிய சேவையாக மிளிர்கின்றது. இதற்காக உழைத்துவரும் அஞ்சலக உத்தியோகத்தர்கள் ஊழியர்களின் பணி பெரிதும் முக்கியத்துவமிக்கதாகும்.
எல்லா வீடுகளுக்கும் தட்டிச் சென்று சேவையாற்றும், அர்ப்பணிப்பான சேவை மனப்பாங்கு கொண்ட ஊழியர்களைக் கொணடதாக அஞ்சல் திணைக்களம் திகழ்கின்றது.
நவீன யுகத்தில், நவீன சாதனங்கள் பெருகிவிட்ட பேதிலும் என்றுமே முக்கியத்துவமும், நம்பிக்கையும் இழக்காத தபால் சேவையின் சிறப்பு திணைக்களத்தின் பணிகளும் எடுத்துக்காட்டானதுமாகும்.
நீண்ட வளர்ச்சிப்பாதை கொண்ட அஞ்சல் திணைக்கள சேவையில் பாரம்பரிய அஞ்சல் சேவைக்குப் புறம்பாக நவீன மயப்பட்ட முகவர் சேவைகள் உட்பட காலத்திற்கு ஏற்ப பல புதிய சேவைகளும் தற்சமயம் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
எமது நீண்டகால தனித்துவ சேவைகள் இன்றும் என்றும் மக்களுடன் இரண்டறக் கலந்ததாகவேயுள்ளன” இவ்வாறு அவர் கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம்