
posted 17th October 2021
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்கவும், இழுவை படகு சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் கோரி ஞாயிற்றுக்கிழமை (17.10.2021) கடலில் படகு பேரணி இடம் பெறவுள்ளது.
முல்லைத்தீவு நகர துறைமுகத்தில இருந்து காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போராட்டம் முற்பகல் 10 மணியளவில் பருத்தித்துறை துறைமுகத்தில் நிறைவடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை வடமராட்சி கிழக்கு கடல்பரப்பால் படகுகள் பேரணி நகரும்போது கரையிலுள்ள மீனவர் கிராமங்களிலிருந்து படகுகளில் மீனவர்களும் ஆதரவாளர்களும் பங்கேற்பர். பருத்தித்துறை துறைமுகத்துக்கு அப்பால் இருக்கும் சுப்பர்மடம், பொலிகண்டி மீனவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பருத்தித்துறை கற்கோவளம் இறங்குதுறைக்கு சென்று அங்கிருந்து பேரணியில் பங்கேற்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம். ஏ. சுமந்திரன் எம். பியின் அழைப்பின் பேரில் இடம்பெறும் இந்தப் போராட்டத்துக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி, வடராட்சி, வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சம்மேளனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அத்துடன், இந்தப் போரட்டத்தில் முல்லைத்தீவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், சி. சிறீதரன், இரா. சாணக்கியன், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான து. ரவிகரன், ச. சுகிர்தன், கே. சயந்தன் ஆகியோர் பங்கேற்பர் என்று தெரிவித்துள்ளனர்.
இதேசமயம், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா பருத்தித்துறை துறைமுகத்திற்கு சென்று போராட்டக்காரர்களுடன் இணைவார் என்று தெரிவித்த அவர், எனினும், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் சிலவேளைகளிலேயே போராட்டத்தில் பங்கேற்பார் என்று அவர் எமக்குக் கூறினார்.

எஸ் தில்லைநாதன்