
posted 5th October 2021
உலக ஆசிரியர் தினமான நாளை (06 ஆம் திகதி) புதன் கிழமை, நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டப் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கான முஸ்தீபுகளை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ளன.
நாடளவிய ரீதியிலுள்ள 312 கல்வி அலுவலகங்களுக்கு முன்பாக இந்த பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ள அதேநிலையில், தமது வீடுகளுக்கு முன்னால் கறுப்புக் கொடிகளை ஏற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமது சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வைத் தருமாறும் மற்றும் மாணவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்துமாறும் கோரிக்கைகளை முன்வைத்து இந்த நாடுதழுவிய போராட்டம் நாளை நடத்தப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சர்வதேச ஆசிரியர் தினத்தை கறுப்பு தினமாகப் பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கை இஸ்லாமிய ஆசிரிய சங்கத்தின் பிரதான ஆர்ப்பாட்டம் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெறவுள்ளதாக சங்கத் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா அறிவித்துள்ளார்.
மேலும் கிழக்கில் மேலும் பல இடங்களிலும் அதிபர், ஆசிரியர்களின் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
வருடாந்தம் எழுச்சியுடனும், உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்றுவந்த உலக ஆசிரியர் தினம் இம்முறை கறுப்பு தினமாக அனுஷ்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளமை குறித்து பலரும் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம்