
posted 19th October 2021

வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்கள் மீதான தேவையற்ற சட்டங்களை நீக்குவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளதை ஐக்கிய காங்கிரஸ் கட்சி பாராட்டியுள்ளது.
இது தெடர்பாக ஐக்கிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளையுடைய தாய்மார்களால் செய்யப்பட வேண்டிய கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அதன் காரணமாக வெளிநாடு செல்ல விரும்பும் பெண்கள் மிக இலகுவாக தமது பயணத்தை மேற்கொள்ள முடியும்.
ஒரு தாய் வேலை வாய்ப்பிற்காக போகின்றாள் என்றால் அவள் தனது குழந்தைகளின் எதிர் காலத்துக்காக செய்யும் தியாகமாகவே பார்க்க வேண்டியுள்ளது.
கடந்த காலத்தில் இவ்வாறு வெளிநாட்டுக்கு செல்ல விரும்பும் பெண்கள், கிராம சேவகர் கடிதம், பிரதேச செயலாளர் கடிதம் கட்டாயம் பெற வேண்டும் என்ற சட்டம் காரணமாக பலருக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன் லஞ்சம் கொடுத்து கடிதம் பெற்ற சம்பவங்கள் உண்டு.
ஒரு பெண் அவள் குழந்தையின் தாயாக இருந்தாலும், தனது மாகாணம் அல்லாத வேறு மாகாணத்தில் அரச உத்தியோகம் பார்ப்பதற்காக கட்டாயம் போகும் நிலை இருக்கும் போது சுய விருப்பத்துடன் வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்பும் பெண்களுக்குரிய வசதிகளை செய்து கொடுப்பது அவசியமாகும். இத்தகைய பெண்களிடம் இருந்து சுய விருப்பின் பேரில் வெளிநாடு செல்வதாக சத்திய பிரமாணம் இருந்தால் போதுமானதாகும்.
அந்த வகையில் இப்படியான தேவையற்ற சட்டங்களை நீக்க பரிந்துரை செய்த நிதி அமைச்சர் பெசில் ராஜபக்சவை ஐக்கிய காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது.

ஏ.எல்.எம்.சலீம்