
posted 25th October 2021
மன்னார் மாவட்டம் மற்ற மாவட்டங்களைப் போன்று நெற் செய்கைக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பயிருக்குத் தேவையான, அவற்றிற்குப் பழக்கப்பட்ட உரமான இரசாயன பசளையும் இல்லை கிருமி நாசினியும் இல்லை என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
திங்கள் கிழமை (25.10.2021) மன்னார் மாவட்டத்தின் கமநல சேவைகளின் 174 விவசாய அமைப்புக்கள் ஒன்றிணைந்து விவசாய சம்மேளனத்தின் தலைமையில் உயிலங்குளம் பகுதியில் இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தினர். இப் போராட்டத்தில் கலந்து கொண்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இங்கு உரையாற்றுகையில்;
இங்குள்ள விதை நெல்லானது இரசாயன உரத்துக்கு பழக்கப்பட்டவை. அத்துடன் சேதன பசளைகளுக்கு எற்றவாறு விதை நெல்லை முதலில் அரசு தயார்படுத்தியிருக்க வேண்டும். அதைச் செய்யவுமில்லை. மாறாக, திடீரென சேதன பசளையை விவசாயிகள் பாவித்தே நெற்செய்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மாற்றுவழியற்ற பாதையை ஜனாதிபதி வகுத்திருப்பது விவசாயிகள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள் என்று தெட்டத்தெளிவாகின்றது.
ஜனாதிபதியின் பிழையான திட்டத்தின் காரணமாக விவசாயிகள் விவசாயம் தொடங்க முன்பே வீதிக்கு வந்துவிட்டனர். ஜனாதிபதி ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும் எமது விவசாயிகள் அறுபது வருடங்களாக இரசாயன உரத்தை பாவித்தே தங்கள் நெற் செய்கையை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இன்று இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கிழங்காக இருக்கலாம் அல்லது பருப்பாக இருக்கலாம் இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் இரசாயன உரம் பாவித்தே செய்கைப் பண்ணப்பட்டு வருகின்றது.
இவ்வாறு இருக்க நெற்செய்கைக்கு மாத்திரம் இரசாயன பசளையை நிறுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாகும் என நான் உணர்கின்றேன்.
இங்குள்ள விதை நெல்லானது இரசாயன உரத்துக்கு பழக்கப்பட்டவை. அத்துடன் சேதன பசளைகளுக்கு எற்றவாறு விதை நெல்லை முதலில் அரசு தயார்படுத்தியிருக்க வேண்டும்.
இவைகள் ஒரு குறுகிய காலத்தில் செய்ய முடியாது என்பதனை அரசானது உணர்ந்துகொள்ள வேண்டும்.
இந்த அரசை சார்ந்த பல அமைச்சர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் இது தொடர்பாக கலந்துரையாடும் போது ஜனாதிபதியின் பிழையான முடிவுகளை பகிர்ந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஒரு முடிவை எடுத்தால் அவர் அதிலிருந்து பின்வாங்க மாட்டார். இதனால் நாங்கள் அரசாங்க கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன் காரணமாக தங்கள் சொந்த மாவட்டங்களுக்கே போக முடியாது தவிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம், விவசாயிகளின் இந்த எதிர்ப்பே என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே ஜனாதிபதி இந்த திட்டத்தை ஒரு ஆய்வுக்கு உட்படுத்தி இதற்கான முடிவை உடன் மாற்ற வேண்டும்.
அண்மையில் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உரத்திலும் நம்பிக்கை இழந்து திருப்பி அனுப்பப்பட்ட சம்பவமும் உண்டு.
நமது நாட்டில்தான் நாளுக்கு நாள் இரவோடிரவாக பல பொருட்களின் விலைகளை அதிகரிக்கப்படுவது இந்த அரசாங்கத்தால் தான்.
ஜனாதிபதி தெரிவிக்கும் கருத்து அரிசினதும் பருப்பினதும் விலையை நிர்மானிப்பதற்கு த்தான் தான் ஜனாதிபதியாக வரவில்லையென்று. இது ஒரு வியப்புக்குரியதாக இருக்கின்றது.
ஆகவே இந்த அரசும் ஜனாதிபதியும் உடனடியாக ஆராய்ந்து விவசாயிகளுக்கு விமோசனத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என நிர்மலநாதன் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ