
posted 27th October 2021

வினோநோகராதலிங்கம் பா.உ.
இந்த அரசானது விவசாயிகளை கைநெகிழுமாகில் இந்த நாடு பெரும் பஞ்சத்துக்கு உள்ளாக நேரிடும். ஆகவே அரசானது தனது பிடிவாதத்தை கைவிட்டு விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிமடுக்க வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி வேண்டி மன்னார் மாவட்டத்தின் 174 கமநல சேவை விவசாய அமைப்புக்கள் ஒன்றிணைந்து மன்னார் விவசாய சம்மேளனத்தின் தலைமையில் உயிலங்குளம் பகுதியில் மாபெரும் கவனயீர்ப்பு போரட்டம் ஒன்றை திங்கள் கிழமை (25.10.2021) மேற்கொண்டனர்.
இதன்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் இப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது;
மன்னார் மாவட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு இரசாயன உரம் மற்றும் கிருமி நாசினி வேண்டி போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களுடைய போராட்டத்தில் நாங்களும் இவர்களுடன் முழுமையாக இணைந்துள்ளோம்.
இப் பிரச்சனை மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமல்ல இந்த நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் பிரச்சனையாக இருக்கின்றது. விவசாயிகளை கைவிட்டால் இந்த நாடு பெரியதொரு வறுமைக்கு தள்ளப்பட்டு விடும்.
அரசானது இந்த உரப் பிரச்சனையை விட்டுக் கொடுக்காத நிலையில் அவர்கள் தன்னிச்சையான செயல்பாட்டில் இருந்து வருகின்றனர்.
ஒரு இராணுவ வீரனாக இருந்தவருக்கு விவசாயத்தின் அருமை தெரியாது.
ஆகவே அரசானது உரத்தை இறக்குமதி செய்து விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்துவதற்கான செயல்பாட்டில் இறங்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் அரசுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
மன்னார் மாவட்டத்திலுள்ள விவசாய நிலம் சேதன பசளைக்கு இடம்கொடுக்காத நிலை காணப்படுவதால் திடீரென சேதன பசளைக்கு இங்குள்ள நிலத்தை மாற்றுவது ஒரு கடினமான செயல்பாடாகும்.
ஆகவே விவசாயிகள் இந் நிலத்தை சேதன பசளைக்கு ஏற்ப பக்குவப்டுத்தும் வரைக்கும் விவசாயிகளுக்கு இரசாயன பசளையை இந்த நேரத்தில் வழங்க வேண்டும் என நாம் இங்கு கோரி நிற்கின்றோம் என தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ