அதிருப்தியும், கண்டனமும்
அதிருப்தியும், கண்டனமும்

தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர்

“ஒரே நாடு, ஒரே சட்டம்” செயலணிக்கு, பொது பலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்ட அமர்வில் உறுப்பினர்கள் பலரும் கவலையும், கண்டனமும் வெளியிட்டனர்.

நிந்தவூர் பிரதேச சபையின் இம்மாதத்திற்கான சபைக் கூட்ட அமர்வு தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் பொது ஜனாதிபதியால் ஒரே நாடு ஒரே சட்டம் எனும் கோஷத்தை நடைமுறைப்படுத்துவதற்கு விஷேட வர்த்தமானி மூலம் நியமிக்கப்பட்ட செயலணி தொடர்பிலும், இந்த செயலணியின் தலைவராக, சட்டத்தை மதிக்காத, இனவெறி கக்கும், நீதிமன்ற அவமதிப்பில் குற்றவாளியாகக் காணப்பட்டவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக விசேடமாக ஆராயப்பட்டதுடன், சபை உறுப்பினர்களுக்கும் இந்த விவகாரம் தொடர்பில் கருத்துக்களைக் கூறவும் சந்தரப்பம் வழங்கப்பட்டது.

இந்த விடயத்தை சபையினருக்கு தெரிவித்த தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் உரையாற்றகையில் பின்வருமாறு கூறினார்.

“சிறுபான்மை சமூகங்களை நசுக்கவும், அவர்களது அடிப்படை உரிமைகள், தனியார் உரிமைச்சட்டங்களுக்கு வேட்டு வைக்கவும் நோக்ககாக் கொண்டே “ஒரே நாடு ஒரே சட்டம்;” கோஷத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயலணியை ஜனாதிபதி நியமித்துள்ளாரென்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.

அதிலும், நாட்டில் இன ரீதியான பல பிரச்சினைகளை உருவாக்கவும், குழப்பங்களை இனங்களுக்கிடையே தோற்றுவிக்கும் வண்ணம் கருத்துக்களை வெளியிட்டும், தூண்டியும் இன வெறியாட்டம் ஆடிய ஞானசார தேரர் இந்த செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை சிறுபான்மை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஆக்ரோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக நாட்டில் இனங்களுக்கிடையே வன்செயல்களைத் தொடர்ச்சியாகத் தூண்டி வருபவரும், நீதி மன்றத்தையே அவமதித்த குற்றவாளியாக தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவரும், உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டவருமான கலகொட அத்தே ஞானசார தேரரை செயலணியின் தலைவராக நியமித்துள்ளமை பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

ஞானசார தேரர் தமது பழைய பல்லவியையே தொடர்வாரா என்பதையும் ஊன்றி அவதானிக்க வேண்யுள்ளது. அவரது கடந்தகால செயற்பாடுகளின் வரலாறுகள் மிகவும் கசப்பானவையும், விசனிக்கத் தக்கவைகளுமாகும்.

மேலும், முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சினைகளை அடிக்கடி சீண்டிவரும் இந்த அரசின் வியக்கத்தக்க மேற்படி நடவடிக்கையை நாம் ஏற்க முடியாது” என்றார்.

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ரி.எம்.சப்றாஸ் உரையாற்றுகையில்,

“சிறுபாண்மை மக்களுக்கெதிராக விதண்டாவாத செயற்பாடுகளை அரங்கேற்றுவதற்கு முன்னோடியான செயற்பாடே ஞானசார தேரர் தலைமையிலான செயலணியாகும்.

நீதி அமைச்சர், சட்டத்தரணிகள் இல்லாத இச் செயலணி பேரினவாத குறுகிய நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த விடயத்தில் நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை விடுவதோடு மட்டும் நின்றுவிடாது காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எல்.றியாஸ் ஆதம், ஏ.எம்.அன்ஸார், ஏ.வாஹித், எம்.ஐ.பாத்திமா றிகானா பிரதி தவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வை ஆகியோரும் சபையில் இந்த விடயத்தின் மீது கண்டன உரைகளையாற்றினர்.

அதிருப்தியும், கண்டனமும்

ஏ.எல்.எம்.சலீம்