Late Dr.Y.K.M.Lahie, Heart Surgeon
Late Dr.Y.K.M.Lahie, Heart Surgeon

இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மறைந்த டாக்டர் வை.கே.எம்.லாஹி MBBS,MS,FRCS

மர்ஹூம் டாக்டர் Y.K.M.லாஹியைப் பற்றி ,அவரிடம் பயிற்சி பெற்ற இன்னொரு இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் எழுதியது.இலங்கையில் பல்லாயிரக் கணக்கான பலதரப்பட்ட இருதய அறுவைச் சிகிச்சைகளை (குழந்தைகள் உட்பட )வெற்றிகரமாக மேற்கொண்ட அவர் தனது 63 ஆம் வயதில் மாரடைப்பினால் மரணமானார்.அன்னாரது ஜனாஸா இம் மாதம் 8ஆம் திகதி கொழும்பு, ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மறைந்த டாக்டர் வை.கே.எம்.லாஹி MBBS,MS,FRCS இலங்கையில் நவீன இருதய அறுவை சிகிச்சையின் முன்னோடிகளில் ஒருவர்.

இலங்கை தேசிய வைத்தியசாலை (கொழும்பு) இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் இரேஷ் விஜேயமான அவரை பற்றி மனம் திறக்கிறார்.

இம் மாதம் 7ஆம் திகதி மாலை 6 மணி இருக்கும். எனது கைத்தொலைபேசி அலரியது. மறுமுனையிலிருந்து எனது வார்ட்டில் பணியாற்றும் சிரேஷ்ட மருத்துவ அதிகாரி அந்த அழைப்பு மேற்கொண்டிருந்தார். அவர் எனது நோயாளி ஒருவரைப் பற்றித்தான் குறிப்பிடப் போகின்றார் என்று நினைத்தேன். ஆனால், அது நான் எதிர்பார்த்தவாறு இருக்கவில்லை. முற்றிலும் அதிர்ச்சியான ஒரு தகவலாகவே அது என்னை எட்டியது. டாக்டர் வை.கே.எம்.லாஹி காலமாகிவிட்டார் என்பதே அந்த செய்தியாகும். அதனை என்னால் நம்பமுடியவில்லை. நான் முற்றாகவே ஒரு கணம் நிலைகுலைந்து போனேன். ஆனால், வேறு அழைப்புக்களை மேற்கொண்டு அவர் மரணித்த செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

Late Dr.Y.K.M.Lahie, Heart Surgeon

டாக்டர் யூசுப் காமில் முஹம்மத் லாஹியை, 30 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு தெரியும். எனது உள்ளகப் பயிற்சியை முடித்துக்கொண்ட பின்னர் 1992 ஆம் ஆண்டில் கொழும்பிலுள்ள இலங்கை தேசிய வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சை பிரிவில் சிரேஷ;ட மருத்துவ அதிகாரியாக எனக்கு நியமனம் கிடைத்திருந்தது. அங்கு டாக்டர் லாஹி சிரேஷ்ட பதிவாளராக இருந்தார். அப்பொழுது அவர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருவரிடம் பணியாற்றிய போதிலும், கவர்ச்சிகரமான துளிர்விடும் அறுவை சிகிச்சை நிபுணராக அவரை நான் கண்டேன். அவரது தீட்சண்யமான கண்பார்வையும், அறுவை சிகிச்சைகளின் போது சுறுசுறுப்பாக இயங்கிய அவரது கைவிரல்களும் என்னை பெரிதும் கவர்ந்திருந்தன.

ஐக்கிய இராச்சியத்தில் இருதய அறுவை சிகிச்சை துறையில் உயர் பட்டம் பெற்ற பின்னர் முற்றிலும் தகுதி வாய்ந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணரொருவராக 1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடு திரும்பினார்.
அதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இந்நாட்டில் விசேட இருதய அறுவை சிகிச்சை பிரிவு இயங்கி வந்திருக்கின்றது. ஆயினும், சர்வதேச தரச் சிறப்புக்கு ஏற்றதாக அது அமைந்திருக்கவில்லை.

ஆகையால், இங்கு நவீனத்துவமான உயர்தரமான இருதய அறுவை சிகிச்சை பிரிவின் அவசியம் இன்றியமையாததாக இருந்தது. கடல் கடந்த நாடுகளில் பயிற்சி பெற்ற பின்னர் நாடு திரும்பியிருந்த இளம் மருத்துவ நிபுணர்களிடம் அதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. டாக்டர் லாஹி அந்தப் பொறுப்பை தனது தோள்கள் மீது சுமந்துக்கொண்ட முன்னோடிகளில் ஒருவராவார்.

இருதய அறுவை சிகிச்சை பிரிவு ஏனைய அறுவை சிகிச்சை பிரிவுகளை விட தனித்துவமானது. இருதய அறுவை சிகிச்சைக்குள்ளாகும் ஒவ்வொருவரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியவர்களாகவே கருதப்பட்டு வந்தனர். அறுவை சிகிச்சை நிபுணரொருவரால் ஒரு கணப்பொழுதில் ஏற்படக் கூடிய சிறிய தவறு கூட உயிராபத்தை ஏற்படுத்திவிடலாம். ஆகையால், புதிய அறுவை சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதெல்லாம் அவற்றின் பயன்பாடு பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய அவசியம் இருக்கின்றன.

சிகிச்சை முறைகள் திருப்திகரமற்றவனவாக இருந்தால் நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு துணிச்சலோடு முகங்கொடுப்பதில் தயக்கம் காட்டுவார்கள். அவர்கள் இருதய மருத்துவ நிபுணர்களால் விதந்துரைக்கப்பட்டவர்களாக இருந்தால் நிலைமையை சமாளிப்பது சிக்கலாக இருக்கும். அது இந்த செயல் திட்டத்தையே முற்றிலுமாக தோல்வியடைய செய்துவிடக் கூடியதாக இருந்திருக்கும்.

டாக்டர் லாஹியை பொறுத்தவரை, அவர் சவால்களுக்கு முகம்கொடுக்கக் கூடிய திராணியை இயல்பாகவே பெற்றிருந்தார். அவர் சவால்களை தைரியமாக ஏற்றுக்கொண்டார். தனது வெற்றிகரமான இருதய அறுவை சிகிச்சைகளினூடாக அவரது நாமம் நாடெங்கிலும் பேசப்படும் நிலைமை தோன்றியது.

அவரது அறுவை சிகிச்சை திறமைகள் இன்னொருவருடன் ஒப்பிடக்கூடியதாக இருக்கவில்லை. அவரது தீர்மானம் மேற்கொள்ளும் திறமையும், நோயாளர்களை உன்னிப்பாக அவதானிக்கும் முறையும் முற்றிலுமே வித்தியாசமானவையாக இருந்தன. அவர் ஒரு வயோதிபரை அறுவை சிகிச்சை செய்த பின்னர் அன்று பிறந்த பாலகனின் இதயத்தை பிளந்து சிகிச்சையளிக்கும் திறமையையும் ஒரு சேரப் பெற்றிருந்தார். இவ்வாறான தனித்துவமான திறமை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிலரிடம் மட்டுமே அரிதாக காணப்படுகின்றது.

நான் எனது உள்நாட்டு பட்டப்பின் படிப்பு பரீட்சையை முடித்தவுடனேயே இருதய அறுவை சிகிச்சை துறையை தேர்ந்தெடுத்தேன். எனது எஞ்சிய வாழ் நாட்களில் பிரகாசிப்பதற்கு வாய்ப்பாக எனது பயிற்றுவிப்பாளராக டாக்டர் லாஹியை நான் எந்தத் தயக்கமுமின்றி தெரிவு செய்தேன்.

ஒரு பயிற்றுவிப்பாளராக அவர் புதியதொரு கலாசாரத்தையே அறிமுகப்படுத்தினார். அதுவரையில் பயிற்சி பெறுபவர்கள் அறுவை சிகிச்சைகளை உற்று நோக்கி பார்வையிடுவதோடும், நிபுணர்களுக்கு அவற்றை மேற்கொள்வதற்கான உரிய உபகரணங்களை கையளிப்பதோடும், சுயமாகவே தேடிப் படிக்க வேண்டிய ஒரு நிலைமை இருந்தது.

டாக்டர் லாஹி இந்த நிலைமையை முற்றாகவே மாற்றியமைத்தார். அவர் எங்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து உற்சாகப்படுத்தினார். சுயமாக தீர்மானம் எடுக்கும் திறனையும் எங்களில் வளர்த்தார். எங்களது செயற்பாட்டை பின்னாலிருந்து உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தார். எங்களை முற்றிலும் திறமை வாய்ந்த அறுவை சிகிச்சை வைத்தியர்களாக வார்த்தெடுப்பதில் பயிற்சிகளின் போது அவர் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

டாக்டர் லாஹி உண்மையில் ஒரு கனவானாக இருந்தார். அவருடன் பணியாற்றிய ஒவ்வொருவருடனும், நற்புறவுடன் பழகினார். அவரிடம் சில அரிய சிறப்புத் தன்மைகள் காணப்பட்டன. அறுவை சிகிச்சைகளின் போது ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பயிற்சியாளர்களின் அபிப்பிராயங்களையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். இதுவொரு பெருந்தகைக்குரிய குணாம்சமாகும்.

அவர் தன்னுடன் கடமையாற்றிய சகலரையும் நேசித்ததோடு, அனைவரையும் சமமாகவே மதித்தார். வார்ட்டுகளில் நோயாளர்களை அணுகும் போதும், அறுவை சிகிச்சை கூடத்தினுள் நுழையும் போதும், மெல்லிய புன்னகையுடனேயே காணப்பட்டார். அவர் உணர்ச்சிவசப்பட்டு கோபமடைந்ததை நாங்கள் ஒருபோதும் கண்டதே இல்லை. எவர் மீதும், எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் சீறிப்பாய்ந்ததும் இல்லை.

அவரது தீடீர் மறைவினால் இலங்கையில் நவீன இருதய அறுவை சிகிச்சை துறை அதன் திறமை வாய்ந்த முன்னோடிகளில் ஒருவரை இழந்திருக்கின்றது. 27 வருடங்களுக்கு மேலாக பல்லாயிரக் கணக்கான இருதய அறுவை சிகிச்சைகளை அவர் வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தார்.

ஒரு வாரத்திற்கு முன் என்னுடன் தொலைபேசியில் உரையாடிய போது தாம் இறுதியாக கடமையாற்றிய கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருதய அறுவை சிகிச்சை பிரிவை நவீனமயமாக ஸ்தாபிப்பது பற்றிய தனது கனவைப் பற்றி சொன்னார்.

அவர் மனைவி பாத்திமா மின்னா, மகன் மருத்துவ நிபுணர் ஹுஸைன், மகள் சப்ரீனா ஆகியோரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அவர் இலங்கையில் இருதய அறுவை சிகிச்சை துறையில் எங்களை முன்னிலைப்படுத்திவிட்டு உயிர் நீத்திருந்தாலும், பல்லாயிரக்கணக்கான இதய நோயாளர்களின் உள்ளங்களில் உயிர்ப்புடன் இருப்பார்.

சேர், உங்களுக்கு எங்களது நன்றிகள். சுவனத்தின் வாயில்கள் உங்களுக்கு திறந்திருப்பதாக

டாக்டர் இரேஷ் விஜேயமான MBBS, MS, FRCS
இருதய அறுவை சிகிச்சை நிபுணர்
இலங்கை தேசிய வைத்தியசாலை (கொழும்பு)

Late Dr.Y.K.M.Lahie, Heart Surgeon
Late Dr.Y.K.M.Lahie, Heart Surgeon

ஏ.எல்.எம்.சலீம்