
posted 3rd October 2021

வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் அமைந்திருந்த திலீபன் வைத்தியசாலை கட்டிடமானது போருக்கு பின்னதாக கைவிடப்பட்டிருந்த நிலையில், அதனை புனரமைத்து ஆரம்ப சுகாதார நிலையமாக இயங்க வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஒதுக்கப்படும் ஒதுக்கீடுகளுக்காக முன்னுரிமைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி முன்மொழிவுகளை மேற்கொள்வதற்கான 'கிராமத்துடனான உரையாடல்' மக்கள் சந்திப்பின் ஓர் அம்சமாக J/431 ஆழியவளை பகுதிக்கு விஜயம் செய்திருந்த அங்கஜன் இராமநாதன் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது, அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான திலீபன் வைத்தியசாலை கட்டிட புனரமைப்பு விடயம் அங்கு முன்மொழியப்பட்டது. கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரிடம் இதுதொடர்பில் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை எவரும் இதனைக் கருத்தில் கொள்ளவில்லை எனவும் அம்மக்களினால் தெரிவிக்கப்பட்டது.
போருக்கு பின்னதான சிறிது காலம் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த குறித்த கட்டிடமானது, அப்பகுதியில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படும்போது மீள கையளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த கட்டிடம் தற்போது கைவிடப்பட்ட நிலையில் இருக்கும்போது, அங்கு சமூக விரோத செயல்கள் இடம்பெற முயற்சிகள் இடம்பெறுவதாகவும், வைத்தியசாலையாக முன்னர் அறியப்பட்ட கட்டிடத்தை மீளவும் இயங்க வைப்பதால் பலர் பயனடைவார்கள் எனவும் அப்பகுதி மக்கள் தமது கோரிக்கையை முன்வைத்தனர்.
இதனையடுத்து, குறித்த பகுதிக்கு நேடியாக விஜயத்தை மேற்கொண்ட அங்கஜன் இராமநாதன், வைத்தியசாலை கட்டிடத்தை புனரமைத்து மீள இயங்க வைப்பதற்காக, வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஒதுக்கப்படும் 3 மில்லியன் ரூபாய் திட்டத்தில் 2.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டை வழங்கி வைத்தார்.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்திற்கமைவாக, கௌரவ பிரதமர் அவர்களின் வழிகாட்டுதலில், நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்களினால், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் 03 மில்லியன் ரூபா அபிவிருத்திக்காக ஒதுக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உள்ள மக்களின் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் இனங்காண்பதற்கான விசேட கலந்துரையாடல்கள், அங்கஜன் இராமநாதனால் ஒவ்வொரு கிராமங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்