
posted 6th October 2021
உலக ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் இந்த தருணத்தில் எமது கோரிக்கையான 24 வருட காலமாக புரையோடியிருக்கின்ற சம்பள முரன்பாடுகள் தீர்க்கப்படும் என எதிர்பார்த்து நிற்கின்றோம் என இலங்கை மன்னார் ஆசிரியர் சங்க போராட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் நாடலாவிய ரீதியில் ஆசிரியர் சங்கமானது அரசாங்கத்திடம் சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று புதன்கிழமை (06.10.2021) கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் மன்னார் மாவட்டத்திலும் இக் கவனயீர்ப்பு போராட்டம் இலங்கை ஆசிரியர் மன்னார் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் கல்வி வலயத்துக்கு முன்னால் வீதியின் இரு மருங்கிலும் ஆசிரியர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை பத்து மணிக்கு ஆரம்பித்த இக் கவனயீர்ப்ப போராட்டமானது சுமார் ஒரு மணி நேரமாக நீடித்தது.
இப் போராட்டத்தின்போது ஆசிரியர்கள் தங்கள் கைகளில் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பிய வண்ணம் இப் போராட்டத்தில் ஈடுபட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
இவர்கள் இங்கு தங்கள் கருத்துக்களை முன்வைக்கையில் இன்று (06) உலக ஆசிரியர் தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் எங்களுக்கு 24 வருடங்களாக இழுத்தடிக்கப்படும் சம்பள முரன்பாடானது இன்னும் தீர்க்கப்படாது இருந்து வருகின்றது எனவும், இந்த சம்பள முரன்பாடுகளுக்கான கோரிக்கைகள் சம்பந்தமாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டும் அவைகள் இருட்டறையிலேயே வைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
எனவே ஆசிரியர் அதிபர்களை அவர்களின் கற்பித்தல் நடைமுறைகளுக்கு வழிவிடுமாறும் எங்களை வீதிகளில் இறக்காதிருக்கவும் இலவச கல்வியை முதலாளித்துவத்துக்கு உட்படுத்தாதிருக்கவும் கல்விக்கு ஆறு வீத நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் நாங்கள் இத் தருணத்தில் இவைகளை வேண்டி நிற்கின்றோம்.
எங்கள் சம்பள கோரிக்கையானது ஆசிரியர் தினமாகிய இந்த நேரத்திலாவது அரசு இவற்றை நிவர்த்தி செய்யும் என நாங்கள் எதிர்பார்த்து நிற்கின்றோம்.
ஆகவே இதன் மூலம் ஆசிரியர்களின் நல்வழிகாட்டலில் மாணவர்களை நல்வழிப்படுத்த அரசு முன்வர வேண்டும் என இந்நேரத்தில் வேண்டி நிற்கின்றோம் என தெரிவித்தனர்.
இப் போராட்டத்தின்போது மன்னார் கல்வி வலயத்துக்கு முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

வாஸ் கூஞ்ஞ