விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இரசாயன உரப்பசளையை நிறுத்தி சேதனப் பசளை பாவனை மூலம் விவசாயப் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு அரசு எடுத்துள்ள முடிவைக்கண்டித்தும்,

தற்பொழுது ஆரம்பமாகவுள்ள பெரும்போக நெற்செய்கைக்கு இரசாயன உரப்பசளை, மற்றும் இரசாயன கிருமிநாசினிகளை வழங்கக் கோரியும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நாளை அம்பாற மாவட்டத்தில் இடம்பெறவிருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தின் முக்கிய விவசாயப் பிரிவான நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளே நாளை ஆர்ப்பாட்டத்தில் குதிக்கவுள்ளனர்.

நிந்தவூர் வெல்லஸ்கட் விவசாய கண்டத்திலிருந்து திரளும் விவசாயிகள் நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையம் வரை ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்து, பின்னர் அங்கிருந்து நிந்தவூர் பிரதேச செயலகம் வரை இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது இரசாயன உரம் மற்றும் கிருமி நாசினிகளையே தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விவசாய அமைச்சரைக் கோரும் மகஜர்களையும் விவசாயிகள், பிரதேச செயலாளர் மற்றும் கமநல சேவைகள் பெரும்பாக உத்தியோகத்தர் ஆகியோரிடம் கையளிக்கவுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் ஓர் அங்கமாக விஷம் போல் ஏறியுள்ள வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் ஆவன செய்யுமாறு அரச உயர்மட்டத்தைக் கோரவுமுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பன்னெடுங்காலமாக இரசாயனப் பசளை மூலமே விவசாயச் செய்கையில் விளைச்சலைப் பெற்று வந்த தமக்கு திடுதிப்பென சேதனப் பசளை பயன்பாட்டை அரசு திணித்துள்ளமை, எதிர் காலத்தில் தமது அர்ப்பணிப்பான நெற்செய்கையைப் பாழடித்து, விவசாயிகளை எதிர்காலத்தில் பெரும் நஷ்டமடையச் செய்யும் செயலென விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் முக்கிய பிரதேச விவசாயிகளால் இந்த விடயம் தொடர்பில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பெரும் போக நெற்செய்கை, ஏனைய பயிரச்செய்கை, மரக்கறி செய்கை மற்றும் பழப்பயிர்ச் செய்கைக்குத் தேவையானதும், சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பற்றதுமான நெனோ நைட்ரஜன் திரவப் பசளை ஒரு தொகுதி இந்தியாவிலிருந்து நாட்டுக்குகொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் விவசாயிகள் இதில் திருப்தி கொள்ளவில்லையெனவே கூறப்படுகின்றது.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

எ.எல்.எம்.சலீம்